(ப. இ.) ஆருயிரின் வினைக்கீடாக அவற்றினுக்கு நாளும் இறப்பையும் பிறப்பையும் சிவபெருமான் அமைத்தருளினன். இவ்வுண்மையினை நன்குணர்ந்தும் மக்கள் தங்கள் விருப்பத்தை மீட்டும் உலகப் பற்றாகிய அப் பிறப்பு இறப்பிலே வைப்பர். யாவர்க்கும் எந்தையும் எமக்குத் தலைவனும் ஆகியவன் சிவன் என்று நினைந்து நிறைந்த அன்பினைச் செய்திலர். அவ் அண்ணலாகிய சிவபெருமானை நாடுகின்றிலர். துஞ்ச - சாதல்; முதனிலைத் தொழிற்பெயர். இச்சை உலகப்பற்று. (9) 266. அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான் முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன்1 அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்2 அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. (ப. இ.) சிவபெருமான் இன்ப இயல்பினன். ஆதலின் அவன் அதுவரும் வாயிலாகிய அன்பினிடத்தான். அவ்வன்பினுக்குக் காவலாகப் புறத்துமுள்ளான். அவ்வன்பினுக்குப் புகலிடமாயிருப்பதால் அவன் உடலாகவுமுள்ளான். அன்பும் சிவமும் உடலுமுயிரும் போல் ஒன்றென்ற கருத்தால் அன்பே உடலாகவுள்ளான் எனினும் அமையும். உலகத் தோற்றத்துக்கு முன்னும் அதனுடைய மாற்றத்துக்குப் பின்னும் ஒன்றுபோல் என்றும் நின்று நிலவுபவன் சிவன். அவன் முற்றத் துறந்த முனிவர்க்கும் முதல்வன். வேறெதற்கும் அகப்படாதவன். அன்பினுள்ளாகி வீற்றிருந்தருள்வன். அவனே எய்தற்கரிய அரும் பொருளாயுள்ளவன். அவன் இறவாத இன்ப அன்புடையார்க்குத் தன் திருவடியிணையினை அணைப்பன். என்றும் நீங்காப் பெருந் துணையுமாவன். புறத்தான் - அன்பின் மேலுள்ளவன். உடலாயுள்ளான் - அன்பினையே உடலாகவுள்ளவன். அணை துணை - அணுகிய - நெருங்கிய துணை. (அ. சி.) அன் ...யுளான் - அன்பே சிவம். முன்பினுள்ளான் - உலக உற்பத்திக்கு முன்னும் அதன் அழிவுக்குப் பின்னும் உள்ளவன். (10)
1. செவ்வழல். சம்பந்தர், 3. 8 - 7. 2. அன்பேயென். திருக்களிற்றுப்படியார். 55.
|