2858. இலையில்லை பூவுண் டினவண் டிங்கில்லை தலையில்லை வேருண்டு தாளில்லை பூவின் குலையில்லை கொய்யும் மலருண்டு சூடுந் தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே. (ப. இ.) இலையாகிய இறைநூற் பயிற்சி யில்லை. பூவாகிய நோக்கமுண்டு. நோக்கம் - பிரவிருத்தி. வண்டின் கூட்டம் என்று சொல்லப்படுகிற தொண்ணூற்றாறு (2139) மெய்களின் ஆராய்வு இங்கில்லை. தலையாகிய பயிற்சிப் பயனாம் பேறு இல்லை. வேராகிய காரணப் பயிற்சியுண்டு. தாளாகிய முயற்சியில்லை. பூங்கொத்தாகிய புலப்பொருட்சுவைச் சேர்க்கை இங்கில்லை. ஆனால் உடலூழாம் கொய்யும் மலருண்டு. அம் மலர் உடலூழாகக் கழிதலின் அம் மலரினைச் சூடும் தலையாகிய ஆருயிர் முனைப்பு இங்கில்லை. அம் முனைப்பு கிளைத்துத் தோன்றுதலுமின்று. புலர்தல் - தோன்றுதல். நான்முகன் தலைகிள்ளப்பட்டதென்பது முனைப்பதற்றப்பட்டதென்னு மெய்ம்மையினை ஈண்டுன்னுக. (அ. சி.) இலை - நூற்பயிற்சி. பூ - பிரவிருத்தி. வண்டு - தத்துவ ஆராய்ச்சி. தலை - சாத்தியம். வேர் - சாதகம். தான் - சாதக முயற்சி. பூவின் குலை - சவை முதலிய விசயக் கூட்டம். கொய்யும் மலர் - சுகதுக்க அனுபவம். கொய்யும் தலை - ஆன்ம அனுபவம். கிளை - சீவபோதம். (33) 2859. 1அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு 2நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர் மிக்கவ ரஞ்சு துயரமுங் கண்டுபோய்த் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற 3வாறன்றே. (ப. இ.) திருவடிப் பேறாகிய அக்கரைக்கண் சீர்மிகு சிறப்பினனாகிய சிவபெருமான் ஆருயிர்கள் உய்தற் பொருட்டு நெறி நூலும் துறை நூலும் (தமிழ் வேதாகமங்கள்) ஆக்கவிக்கத் திருவுள்ளங்கொண்டருளினன். அதன்பொருட்டு ஆலமரத்தடியில் தென்முகச் செல்வராய் வீற்றிருந்தருளினன். நூலும் தோற்றுவித்தருளினன். அக் குறிப்பே ஆல் + அமர் + அம் = ஆலமரம் கண்டு என ஓதப்பட்டது. உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்துணர்ந்து அப்பொழுதே தோன்றும் அருளாளர் நக்கர். நக்கர் - தோன்றுபவர். அவர் சிவபெருமானாவர். அவரைத் திருமுறை வாயிலாக வழிபட்டு அடியார் நடுவே யிருக்கும் பயன் கொள்வார் மிக்கவராவர். ஐவகைத்துன்பமாவன: தொன்மை இருள், செருக்கு, அவா, ஆசை, சினம் என்பன. இவை காரியத்தைக் காரணமாக மொழியப்பெற்றன. இவ்ஐவகைத் துன்பத்தினுக்கே தக்கவராய் அவற்றுள் ஆழ்ந்து கண்டதே கண்டு கொண்டதே கொண்டு செல்வார் பிறப்புச் சூழலில் தாழ்ந்து கிடக்கும். முறையினராவர். (அ. சி.) அக்கணம் நின்றதோர் - ஆன்மாவிற் பொருந்தியதோர். ஆலமரம் கண்டு - ஆல் அமர் அம் கண்டு - சிவத்தைக் கண்டு. நக்கண - வெளிப்படையாக. நடுவே - நடுநிலையுடன். அஞ்சு துயரம் - அஞ்சு துன்பம்: (அவித்தை, அஸ்மிதை, இராகம், துவேஷம், அபினிவேசம.்) (34)
(பாடம்) 1. அக்கண. 2. நக்கண. 3. காமம். திருக்குறள், 360.
|