யுணர்வின் பக்கமானார் பக்கனார் எனப்படுவர். அவர் அறிவினுள் அறிவினராவர். அஃதாவது பதினாறாம் (2615) நிலையாகிய ஞானத்தின் ஞானமாகிய நன்னெறியின் நிற்போர். அதனால் அவரே எல்லாரினும் மிக்காராவர். அவர் ஆடல், பாடல், அழகு, அணி, உடை, பூச்சு, நடை, ஊடல், கூடல், மிலைதல், மலைதல், முதலியவற்றால் ஆடவரை மயக்கும் படங்காகிய படாமுலைமேல் துகிலணிந்து நகிலுடன் வரும் பொலமகளிரைச் சிரித்து ஒதுக்குவர். அத்தகைய பிறன்மனை நோக்காத பேராண்மை என்னும் நல்லொழுக்கால் செங்கமலத் திருவடித்தேனை இடையறாது நுகர்ந்து அடியார் நடுவுள் படியிலாப் பரிவுடன் இருப்பர். இதுவே முடியாப் பிறவியின் முடிவு மருந்தாம் என்க. மலர்: செம்மலர் நோன்றாள். வாழ்க்கைத் துணைநலமாகிய நல்லாரிணக்கம் என்றும் வேண்டத்தக்கதே. வீழ்க்கைப் பிணிப்பொலமாகிய அல்லார் இணக்கம் வேண்டத்தகாதென்க. ஆனால் அவ் அல்லார் பிணக்கம் வேண்டத்தக்கதே. (அ. சி.) முக்காதம் ஆற்றில் - முக்குண வழியில் மூன்றுள வாழைகள் - நனவு, கனவு, சுழுத்தி நிலைகள். செக்கு . . . . . . . காய்த்தன தவத்தால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்கள் பக்குவப்பட்டன. பக்கனார் - பக்குவப்பட்ட ஆன்மாக்கள். மிக்கார் மேம்பட்டார். படங்கினார் கன்னியர். நக்கு - மேகலை அணிந்த கன்னியர் மோகத்தை வென்று. மலருண்டு - சிவனாந்தபோகத்தைப் பருகி. (50) 2876. அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில் கொடியும் படையுங் கோட்சரன் ஐயைந்து மடியும் வலம்புரி வாய்த்ததவ் 1வாறே. (ப. இ.) தோற்றமும் மறைவும் பொருந்தியுள்ள இவ்வுலகம் ஓர் ஆத்தி என்று உருவகிக்கப்பட்டது. ஒருபுடையொப்பாக ஆத்திமலர் வெண்மை நிறம்பற்றி மாயையாகக் கொள்ளலுமாம். அம்மாயையின் மாட்டுள்ள பற்று அருளால் அற்று அகலும். அகலவே சுற்றந்தழுவும் காட்டாகிய முற்றிய மூங்கிலின்முத்து வீழ்ந்தனைய திருவடிப் பேற்றின்பம் கைகூடும். முத்தலையென்பதற்கு மூன்று திருக்கண்களையுடைய சிவபெருமான் எனவும் முத்தலை வேற்படை தாங்கும் முக்கண்ணன் எனவும் கூறலுமாம். கொடியாகிய திருவடிநினைப்பும், படையாகிய திருவடி மறப்பும் இல்லாமல் அதுவே தானாய்நிற்கும் நிலையில் குற்றல் பொருந்திய அறிதற்கருவி ஐந்தும் செய்தற்கருவி ஐந்தும் தாமே அகலும். ஐ + ஐந்து = ஐயைந்து; ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. ஐயைந்து என்பதற்கு இருபத்தைந்து எனக்கொண்டு உடன்மெய் இருபத்துநாலும் சிறப்புத் தன்மைசேர் ஆள் ஒன்றும் ஆக இருபத்தைந்து என்றலும் ஒன்று. அவ்விடத்து அருள் துணையால் "ஞானவாள், ஏந்தி நாதப் பறையறைந்து, மானமா ஏறி, மதிவெண்குடைகவித்து, நீற்றுக் கவசம் பூண்டு" மாயப்படையினை வெல்லுவர். தூய இவ்வெற்றியின் அடையாளமாகத்தூவெண் வலம்புரிச் சங்கு நலம்புணர முழங்கும். (அ. சி.) அடியும் முடியும் - தோற்றமும் சிறப்பும். ஆத்தி - உலக சம்பந்தம். முடிய - கெட. முத்தலை மூங்கில் - முத்தியை அளிக்கும்
ஞானவாள். 8. திருப்படையெழுச்சி, 1.
|