2925. அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது அன்னையும் அத்தனு மாரறி வாரென்னை அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து அன்னையும் அத்தனை யான்புரந் 1தேனன்றே. (ப. இ.) ஈன்ற தாய் தந்தையரை அன்பு ஒன்றே காரணமாகக் கொண்டு அறிவதன்றி வேறு எதனைக் காரணமாகக் கொண்டு அறிய முடியும்? முடியாதென்பதாம். அக் குறிப்பு 'என்னை' என்பதனால் பெறப்படும். அன்னையாகிய திருவருளோடும், அத்தனாகிய பெரும் பொருளோடும் அடியேனும் உடனிருந்தேன். கூடியிருந்து அவர்கள் மாட்டு அளவிலாப் பேரன்பாம் பெருங்காதல் கொண்டமையால் அவர்களுக்கு அடிமையாய் நின்று அவர்தம் நிறைவிலடங்கி அவர்களை உணர்வின்கண் உணர்ந்தேன். உணரவே நொசிப்பாகிய சமாதியால் என்னுள் நீங்காவாறு மன்ன அமைத்தேன். இதுவே சமாதி என்னும் மயலுறுஞ் செயலறு நிலை; உயலுறுஞ் செயலுறும் நிலை. (அ. சி.) அன்னை - திருவருள் சத்தி. அத்தன் - சிவன். யான் - உயிர். (9) 2926. கொண்ட சுழியுங் குலவரை யுச்சியும் அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும் எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே உண்டனர் நானினி உய்ந்தொழிந் 2தேனன்றே. (ப. இ.) எங்குமாய் நீக்கமற நிறைந்து நிற்கும் சிவபெருமான் 'தானே உலகாம்' தன்மையன். அவன் 'தமியேன் உளம் புகுந்'தருளினன். அதனால் 'இன்று யானே உலகென்பன்' என்பதற்கிணங்கக் கடல், சிறந்த பனிமலையுச்சி, அண்டர்கள், அண்டத் தலைவர்கள், ஆதியாகிய அரன், எண்புலக் காவலர் முதலாகிய அனைவரும் என் வயப்பட்டனர். என்னை யெனின்? சிவபெருமான் என் வயப்பட்டதால் என்க. வேந்தற்கு வயப்பட்டார் அனைவரும் வேந்தன் உரிமைக்கும் வயப்படுவதிதற் கொப்பாகும். இவ் வுண்மை "தொழப்படும் தேவர்தம் மால் தொழுவிக்குந்தன் தொண்டரையே" என்னும் அப்பர் அருண்மொழியான் உணர்க. வயப்படவே அடியேனும் உய்ந்தொழிந்தேன். உரிமை - மனைவி. (அ. சி.) சுழி - கடல். அண்டத் தலைவர் - இந்திரர். ஆதியும் மாயையும் உண்டனர் - வசப்பட்டனர். (10)
1. அன்பினால். 8. கோயிற்றிருப்பதிகம், 2. " செய்யாச். திருக்களிற்றுப்படியார், 59. " அன்பேயென். " 55. 2. அரக்கொடு. சிவஞானபோதம், 2; 1 - 4. " முழுத்தழல். அப்பர், 4. 113 - 5. " பிணத்தினை. சிவஞானசித்தியார், 2.
|