2950. அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானஞ் சமைந்தொழிந் தேன்தடு மாற்றமொன் றில்லை புகைந்தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி வகைந்து கொடுக்கின்ற வள்ளலு 1மாமே. (ப. இ.) திருவருள் நாட்டத்தால் அளவில்லாத புகழை உடைய திருவடியுணர்வின்கண் அமைந்து அடங்கியுள்ளேன். அதனால் திரிபுணர்வாகிய தடுமாற்றம் ஏதும் இன்றி நன்னெறி நான்மையின்கண் (2615) ஒழுகிச் செம்பொருட்டுணிவின்கண் ஆளாய்ச் சமைந்தொழிந்தேன். அதனால் அடியேற்குப் பிறப்பு இறப்புக்களாகிய தடுமாற்றமின்று. 'காமம் வெகுளி மயக்கம்' ஆகிய மூன்றும் புகைந்து அகப்பகையாய் ஆருயிர்கள் மாட்டு எழுகின்றன. அத்தகைய வுயிர்கள் நிறைந்துள்ள இந்நிலவுலகத்தின்கண் புண்ணியத் திருவுருவினனாகிய சிவபெருமான் சிவகுருவாக நண்ணியருளினன். அவன் முப்பொருளுண்மையினையும் அருஞ்சைவர் மெய் முப்பத்தாறினையும் திட்பமுற வகைப்படுத்தி உணர்த்தியருளினன். அப்பெருமான் இயல்பாகவே ஆருயிர்க்கு வேண்டுவன நல்கும் யாண்டும் உயர்வொப்பில்லா ஒருபெரும் வள்ளலாவன். (அ. சி.) தடுமாற்றம் - மயக்க உணர்ச்சி, புகைந்து எழுபூதலம் - காமாதிகளால் பதைப்புண்டு திரிகின்ற மக்களை. புண்ணியன் - சிவன். வகைந்து - தத்துவ உபதேசம் செய்து உண்மை காட்டி. (11) 2951. வள்ளற் றலைவனை வானநன் னாடனை வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக் கள்ளப் பெருமக்கள் காண்பர்கொ லோஎன்று உள்ளத்தி னுள்றே ஒளித்திருந் 2தாளுமே. (ப. இ.) வள்ளல் தலைவனாக யாண்டும் விளங்குபவன் சிவபெருமான். அவனே சிவ வுலக முதல்வன். சலமகள் என்று சொல்லப்படும். நடப்பாற்றலின் உருவகமாம் வெள்ளப் புனல்மகளைத் திருச்சடையில் வைத்துள்ளான். அங்ஙனம் வைத்தருளியது ஆருயிர்களின் அகங்காரமாகிய முனைப்பெழுச்சியை அகற்றுதற் பொருட்டேயாம். இக் குறிப்புத் 'தரணியெல்லாம், பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ' என்னும் செந்தமிழ்த் திருமுறை முடிவினால் விளங்கும். (இதன் பொருள்: ஆருயிர் ஆதியாகிய நடப்பாற்றலின் வழிப்படா விட்டால் ஆணவ முனைப்பால் மீணடும் பிறப்பாகிய கருநிலை என்று சொல்லப்படும் பில முகத்தே பாய்ந்து பெருங்கே டெய்தும் என்பதாம்.) அவன் வாலறிவனாதலின் அவனே மறைமுதல்வனாவன். அவன்
1. வெள்ளி. 12. திருநாவுக்கரசர், 379. " எண்ணுகேன். அப்பர், 6. 99 - 1. 2. விள்ளத். அப்பர். 4. 76 - 7. " வெள்ளநீர்ச். " 4. 75 - 9. " நெக்கு. " 5. 90 - 9. " மலைமகளை. 8. திருச்சாழல், 7. " பாசம். " திருவெம்பாவை, 2.
|