14. கேள்விகேட்டமைதல் 287. அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும் புறங்கேட்டும் பொன்னுரை மேனி1யெம் ஈசன் திறங்கேட்டும் பெற்ற சிவகதி2 தானே. (ப. இ.) மறைநூலை அறம் என்று கூறுவது ஆன்றோர் வழக்கு. எனவே அறங்கேட்டும் என்பது உலகியல் ஒழுக்கங்களை உள்ளவாறு கள்ளமில் உள்ளத்து நல்லார்பால் வல்லவாறு கேட்கும் என்பதாகும். சிவனடியார் அவ் வறத்தினை உலகோர் நலமொன்றே கருதி நெடுநுகத்துப் பகல் போன்று வடுவஞ்சி வாய்மொழிவர். அத்துடன் துய்மையராய்ச் சிவனடி நினைவும் தவ வாழ்க்கையும் பேரருளும் பூண்டு ஒழுகுவோர் அந்தணராவர். அவர் கூறும் மெய்யுணர்வுக்கு வாயிலாம் அறிவுரைகளைக் கேட்டும், அறமாகிய புண்ணியத்துக்கு மாறாகிய பாவங்களையுணர்ந்து விலகுதற் பொருட்டும் விலக்குதற் பொருட்டும் அமைதியுடன் இருந்து கேட்டும், சிவவுலகோர் கூறும் சிறப்புக்கு வாயிலாம் மறைமொழியாகிய மந்திரங் கேட்டும், பிறநூல் இயல்புகளைத் திறமுறக் கேட்டும், பொன்போலும் எனப் புகழ்ந்து சொல்லப்படும் திருமேனியையுடைய நம் ஆண்டவனுடைய திருவருள் திறங்களைப் பொருளுறக் கேட்டும் அவனருளால் பெற்றநிலை சிவநிலை ஆகும். மறம் - பாவத்தின் இயல்பு. புறம் - பிறர் நூல். திறம் - தன்மை. இதன்கண் கூறப்படும் கேட்டும் என்னும் வினை எச்சம் ஆறினானும் செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை என்னும் ஆறு பகையும் அறுதல் பெறப்படும். சிவன் நினைவுடையார் 'இன்பம் விழையான் வினைவிழைவான் தன் கேளிர், துன்பம் துடைத் தூன்றும் தூண்' என்பதன் எடுத்துக் காட்டாய் நிற்பர். இதுவே சிவன் நிலை. இதுவே இருவினையொப்பு. (1) 288. தேவர் பிரான்தனைத் திவ்விய மூர்த்தியை3 யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின் ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின் ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே. (ப. இ.) எத்தேவரும் என்றும் நத்தும் பெருமான் சிவன். சிறந்த திருவருளுருவன் சிவபெருமான். அவனை அவனருளால் யாவர் ஒருவர் அகத்துணர்வார், அவரே கேட்பித்தற்குரியார். ஆதலால் அங்ஙனம் உணர்ந்தபின் யாவரும் தீதின்றி உய்ந்து திருவடி சேர்தற்பொருட்டு ஓதுங்கள். சைவ மாண்புடையார் கூறக் கேளுங்கள். உணர்வதாகிய நாடுதலைச் செய்யுங்கள். அதன் பின்னும் இடையறாது ஓதியுணர்ந்தவர் செந்நெறிக்கண் ஓங்கி நின்றவராவர். (2)
1. பொன்னார். ஆரூரர், 7 - 24 - 1. 2. கிண்கிணி. புறநானூறு, 77. 3. முன்பெலா. அப்பர், 4. 28 - 1.
|