1267
 

(அ. சி.) உருக்கொடு - தோன்றி. தன்னடுவோங்க - தன்னிடத்து ஓங்க. இவ்வண்ணம் கருக்கொண்டு - இவ்வகையாய ஏதுவினால்.

(16)

2998. பலவுடன் சென்றஅப் பார்முழு தீசன்
செலவறி வாரில்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி
பலவில தாய்நிற்கும் பான்மைவல் லானே.

(ப. இ.) இயங்குதிணையும் நிலைத்திணையுமாகவுள்ள அளவில்லாத பல பொருள்களுடன் கூடியது அழகினையுடைய இந்நிலவுலகம். இவ்வுலக முழுவதும் கலப்புத் தன்மையால் ஒன்றாய்ப் பிரிப்பின்றி விரவி நிற்கும் முழுமுதற் பரம்பொருள் சிவபெருமான் ஒருவனே. அவனே ஈசன். அவன் இவ்வுலகுடன் இயைந்து இவ்வுலகை நடத்தும் இயல்பின் மெய்ம்மைத் தன்மையை உள்ளவாறுணர்வாரில்லை. அவன் அன்பர்க்கு மிகவும் அணியனாகவுள்ளான். அல்லாதார்க்கு மிகவும் சேயனாகவுள்ளான். அணிமை - கிட்டம் சேய்மை - எட்டம். அவன் எவ்வகை மாறுபாடும் இல்லாதவன். எல்லாவுயிர்க்கும் யாண்டும் இன்பஞ் செய்தலின் அவன் திருப்பெயர் சங்கரன். அவன் ஆதியாகிய நடப்பாற்றலோடு கூடியவன். எம்முடைய அன்பறிவாற்றல் யாண்டும் செம்மையாக நிகழ்வதற்கு என்றும் காரணமாகவுள்ளவனும் அவனே. அவன் ஒன்றாய் வேறாய் உடனாக என்றுரைக்கப்படும் பலவாகக் கலப்புற்றிருப்பினும் அவன் ஒத்தாரும் மிக்காரும் இல்லாத ஒரு முதல்வனேயாவன். மேலும் பலவாய்க் காணப்படும் பான்மையனும் அல்லன். அவன் எவ்வகையா நோக்கினும் 'ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்' (2066) என்னும் செந்தமிழ்த் திருமறையின் வண்ணம் ஒழுகுவதே சாலச் சிறந்ததாகும் 'ஆதி' இரண்டனுள் முன்னது நடப்பாற்றல்; பின்னது காரணம்.

(அ. சி.) பரிவுடன் - இயங்குவன நிற்பன முதலிய பல பொருள்களுடன். செலவு - ஆணை. அலைவிலன் - மாறாதவன். பல இலவாய் - பல என்பது இல்லாது நிறைந்து.

(17)

2999. அதுவறி வானவன் ஆதிப் புராணன்
எதுவறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுவது வான புவனங்கள் எட்டும்
இதுவறி வான்நந்தி எங்கள் 1பிரானே.

(ப. இ.) ஆருயிர்களின் அறிவை விளக்கி அவற்றின் அறிவினுக்கு அறிவாக நிற்பவன் சிவன். இது மோர் பாலுடன்கூடி அப் பாலினைத் தயிராக்குவது போன்றாகும். ஆசிரியன் அறிவு மாணாக்கன் அறிவுடன் கூடி மாணாக்கண் அறிவை விளக்குவதும், ஞாயிற்றின் ஒளி கண்ணொளியுடன்கூடி கண்ணை விளக்குவதும் இதற்கு ஒப்பாவன. எல்லாவற்றினுக்கும்


1. மறையினால். சிவஞானசித்தியார், அவையடக்கம்.

" பத்திமையாற். அப்பர், 6. 54 - 3.

" கந்தமலர்க். " " 84 - 4.

" மணமுலா. சம்பந்தர், 1. 76 - 6.