தென்னா டுடைய சிவனார் அகத்தியரைத் தென்னாட்டுப் போக்கித் தெளிதமிழைப் - பன்னுவித்து மெய்கண்டார் தம்மால் விரித்தார் வடபுலத்தம் மெய்கண்டார் மீள்வர்தென் பால். (1) 324. அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. (ப. இ.) நாள்தொறும் சிவபூசைக்கு உறுப்பாகிய அகம் புறத்தீகளைத் தவறாது திருவைந்தெழுத்தாகிய சிறந்த செந்தமிழ் மந்திரம் ஓதி நாடு வளம்பெற வளர்ப்பவன் அகத்தியன். உள்ளொளியாய்ப் பேரொளியாய் அறிவொளியாய் இயற்கை ஒளியாய் விளங்கிக் கொண்டிருக்கும் சிவபெருமான் வடபாலுள்ள திருவெள்ளி மலையில் அங்கியாய் வீற்றிருந்தருள்கின்றனர். அங்கு அவனை வழிபட்டுக்கொண்டு இருந்தவன் அகத்தியன். அவன் சிவபெருமான் திருவாணைப்படி தென்றல் தவழும் மேல்பால் மலை என்று சொல்லப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பால் விளங்கும் பொதியிலின்கண் வந்து உறைந்தனன். அவனொடும் எல்லா இடங்களிலும் வளங்கொழிக்க அருள்புரிவது சிவவேள்வியில் தோன்றும் இலங்கொளி என்க. மங்கி :மயங்கி - கலந்து. (அ. சி.) அங்கி உதயம்செய் - சிவ பூசையில் உதயத்தில் அக்கினி காரியம் செய்கின்ற. (2)
2. பதிவலியில் வீரட்டம் எட்டு 325. கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்1 வரத்தின் உலகத் துயிர்களை யெல்லாம் வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே. (ப. இ.) கூற்றுவனை ஒத்துக் கொடுமையே நிறைந்த கருத்துடைய அந்தகப் பெயர் சேர் அசுரன் சிவபெருமான்பால் பெற்ற வரப்பேற்றால் உலகத்துயிர்களை எல்லாம் வருத்துவானாயினன். நற்பண்பென்று சொல்லப்படும் வானவர் அக் கொடுமை பொறுக்கலாற்றாது இறைவன்பால் முறையிட்டு வேண்டினர். சிவபெருமானும் வெண்மையும் கூர்மையுமிக்க முத்தலை வேலாம் சூலங் கைக்கொண்டு கருத்தால் அடக்குதலாகிய கொலைத் தொழிலைச் செய்தருளினன். (அ. சி.) அந்தகன் - அந்தகாசுரன். குருத்து - கூர்மை. (1)
1. அயனை. 8. திருச்சாழல், 4. " அந்தகனை. அப்பர், 6 . 96 - 5.
|