342. அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள் அப்பரி சேயவ ராகிய காரணம் அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்டு அப்பரி சாகி அலர்ந்திருந் தானே. (ப. இ.) மேலோதியவாறே மால் முதல் தேவர்கள் தனித்தனியே அக் கொலைவேள்விக்கண் வந்த தங்கள் அறியாமையைப் பொறுக்க வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். சிவபெருமானும் முகமலர்ந்தேற்று அருள் புரிந்தனன். (அ. சி.) கதுவ - தண்டிக்க. (4) 343. அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக் குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச் சிவந்த பரமிது சென்று கதுவ உவந்த பெருவழி யோடிவந் தானே. (ப. இ.) எல்லாப் பொருளூடும் விரவி நின்று இயக்கும் சிவபெருமான் முகமலர்ச்சியுடன் இருந்தருளினன் எனக் கண்டு வானவர் தொழுதனர். தூய்மை முதலிய அனைத்து வகையானும் மேம்பட்டு ஏனையவற்றையும் தூய்மைப்படுத்தும் தன்மையவாகிய உயர்ந்த குலமுடையது தீ. அது புன்மை வாய்ந்த தக்கன் சார்பாய்க் கீழ்மையாகிய குற்றத்தை அடைந்தது. அக் குற்றம் நீங்கும் பொருட்டுச் சிவபெருமான் சினந்து தண்டித்தனன். அத்தகைய சிவபெருமானைத் தீக் கடவுள் மன்னிப்பு வேண்டி அவன் திருவடிபற்றித் தொழுதனன். சிவபெருமான் அதற்கு உவந்தனன். சிவபெருமான் மாட்டு அன்பு வைப்பதே பெருவழி. அவனும் அப் பெருவழி வாயிலாக விரைந்தோடி வந்து அருள் புரிந்தனன். 'கீழங்கி' என்பதற்கு வேதத்துட் கருமகாண்டத்தின் 'விண்டுபரமன், அங்கி அவமன், அவ்விருவர்க்கும் இடையே எல்லாத் தேவரும்' எனச் சொல்லப்படுவதைக் கூறுதலும் ஒன்று. சிவந்த - சினந்த. பெருவழி - பெருமையுள்ள அன்பின் வழி. (5) 344. அரிபிர மன்தக்கன் அருக்க னுடனே வருமதி வாலை வன்னிநல் இந்திரன் சிரமுக நாசி சிறந்தகை தோள்தான் அரனருள் இன்றி அழிந்தநல் லோரே. (ப. இ.) சிவனைப் புறக்கணித்து அவன் திருவருளினை இழந்து தக்கன் புலைவேள்வியில் உழந்தவர் மால், அயன், தக்கன், ஞாயிறு, திங்கள், வாலை, தீ, வானவர்கோன் முதலாயினார் ஆவர். சிவபெருமானிடத்துத் தோன்றிய சினம் தக்கன் வேள்வியினை அழித்தற்கு மிக்க வெவ்வுரு வாய்த் தோன்றிற்று. அவ்வுருவினையே வீரபத்திரக் கடவுள் என்ப. அவர் சென்று வேள்வியிற் கூடிய வானவர்களைத் தனித்தனியே தலை, முகம், மூக்கு, கை, தோள் முதலியவற்றை அறுத்து ஒறுத்தனர். சிவனார் அருளின்றி அவ்வானவர்கள் அனைவர்களும் அழிந்தொழிந்தனர். நல்லோர் என்பது குறிப்புமொழியாக அல்லோர் என்று பொருள்படும்.
|