(ப. இ.) உடலும் உளமும் உணர்வும் உயிரும் திருவருளேயாதலின், அனைத்தும் எப்பொழுதும் தூய்மையேயாம். அத்தகைய உமையம்மையார் அருண்மொழி என்றும் தூய்மையும் வாய்மையும் நன்மையும் அமைந்ததாகும். அத்துணைச் சிறப்பு வாய்ந்த திருமொழியினையுடைய அம்மையே! நின்னால் தெளிவுபெற்று நின்னையடைந்த தெளிவினர் பயிற்சி வயத்தால் கலங்குவர். அதன் பொருட்டு நீயும் கலங்கற்க. ஆணவச் செருக்கால் தக்கன் செய்த புலைவேள்வியினைச் சினந்து அழித்து அவனையும் கொன்றனன் சிவன். அத்தகைய எம் ஆதிப்பிரானை ஆருயிர் அடைவதற்கு வழி கனிந்த அன்பேயாகும். (அ. சி.) அளிந்து - குழைந்து, சுளிந்தாங்கு - கோபித்து. தூய் மொழியாள் : உமை. (9)
5. பிரளயம் 348. கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்1து இருவருங் கோவென் றிகல இறைவன் ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி அருவரை யாய்நின் றருள்புரிந் தானே. (ப. இ.) நீருழிக் காலத்துத் திருவாணையால் கடல் பொங்கிப் பெரிய மலையையும் மூடி எங்கணும் ஒரே வெள்ளமாய்ப் பெருகிற்று. அதனைக்கண்டு அயனும் அரியும் ஆகிய பெருந்தேவர் இருவரும் எனைச் சிறுதேவரோடொப்பக் கோவென்றலறினர். ஒப்பில்லாத சிவபெருமான் ஒருவனுமே அந் நீரின்மேல் பேரொளிப் பிழம்பாய்த் தோன்றினன். அளத்தற்கரிய பெரிய மலைபோல் நின்றனன். அவ் விருவரையும் நோக்கி அஞ்சற்க என்று அருள் செய்தனன். நீர் திருவருள் அம்மையைக் குறிப்பதாகும். தீ பெரும்பொருட் சிவபெருமானைக் குறிப்பதாகும். அம்முறையில் சிவபெருமான் திருவருளம்மையினையே திரு உடலாகக் கொண்டருளுகின்றனன். அதனால் 'சிவபெருமான் நீருற ஓங்கொளியாகி நின்றனன்' என்று ஓதினர். (அ. சி.) இருவர் - அயன், மால். (1) 349. அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர் தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு உலகார் அழற்கண் டுள்வீழா தோடி அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே. (ப. இ.) ஊழியாகிய அலைகடலின் நடுவாக ஊடறுத்துத் சென்று அண்ட முதல்வன் தானே என்பதனை மேற்கொண்டுணர்த்தினன். உலகெங்கணும் நிறைந்து விளங்கும் தழற் பிழம்பினைக் கண்டு ஓடும் ஏனையாரை அக் கடலின் நடுவுள் நின்று வீழ்ந்து மாளாமல் அஞ்சல் என்று அருள் செய்தனன். அவன் யார் என்னில்? அவனே விழுமிய முழுமுதற் சிவபெருமான் என்க. (2)
1. பெருங்கடன். அப்பர், 4 . 113 - 7.
|