405. தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர் வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை. ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி தாங்கிநின் றானும்அத் தாரணி தானே. (ப. இ.) சிவபெருமான் பல்லுயிர்களையும் வேறறக் கலந்து தாங்குவதாகிய காத்தலைப் புரியும் அரிய இயல்பு வாய்ந்தவன். அவ்வுயிர்களை ஒடுக்கும் பேரொடுக்கக் காலத்துக் காப்பதும் அவனே; மற்றோர் எவரும் இலர். மிகச் சிறந்து தோன்றும் தலைமைப் பாட்டினை எய்துவதற்குரிய செறிவு நெறியைக் காப்பவனும் அவனே. செறிவு வழியாற் பெறப்படும் அறிவுநெறியைக் காப்பவனும் சிவனே. அவ்வுலக இன்பநிறைவும் தானே ஆவன். தாங்கல் - காத்தல். அவ்வழி - அச் சிறந்த அறிவு நெறி. அத்தாரணி - வீட்டுலகு. செறிவு நெறி - யோகநெறி. அவ்வழி - அந்த யோகநெறியாக வரும். அறிவுநெறி - ஞானநெறி. (அ. சி.) தாங்கருந் தன்மை - காக்கும் தன்மை. (8) 406. அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும் பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித் தணிகினும் மண்ணுடல்1 அண்ணல்செய் வானே. (ப. இ.) சிவபெருமான் ஆருயிர்களுடன் கலப்பால் ஒன்றாய்க் கூடியிருப்பினும் அவ்வுயிர்களின் கூட்டறிவிற்கும் சிற்றறிவிற்கும் எட்டாத சேய்மையன். இது, கற்பாரொடு கலந்து கற்பிப்பார் காண்குறினும், கற்பார் காணாவறிவர்காண், என்பதனால் விளங்கும் அவ்வுயிர்கள் உயிர்ப்புப் பயிற்சியால் மூலத்தீயுடன் ஒன்றித் திருவருளால் மேல்நோக்கிச் செல்லுதல் வேண்டும். சென்றால் திருவடியுணர்வாகிய ஞானக்கொழுந்தினைச் சிவபெருமான் நல்கியருள்வன். பல்லுயிர்களையும் அவ்வவ்வுயிர்களுக்கேற்ற பணியிற் செலுத்தி உடனாய் நிற்பினும், அவ்வுயிர்களால் காணுதற்கு அரியன். அவ்வுயிர்களுடன் கலந்து தங்கினும் பொருள் தன்மையால் வேறாயுள்ளவன். அவனே மலங்கழுவி நலங்கெழுமுவதற்கு வாயிலாகிய உடலினைப் படைத்தளித்தருளினன். அவன் அருள்வழி நிற்பார்க்கு மலம் கழுவப்படும். மலங்கழுவப்படவே அவ்வுயிர் தலைமைப்பாடமைந்த சிவபெருமான் திருவடியிணையினைத் தலைக்கூடும். கூடவே அதுவும் தலைமைப்பாடெய்தும். இதுவே அண்ணல் செய்தானே என்னும் கருத்தாகும். இதற்கு ஒப்பு, திருமண வீட்டில் கூடினார் அனைவரும் திருமண வீட்டுப் பெயரும் பொருந்தும் மகிழ்ச்சியும் கொண்டு திகழ்வதாகும். மண்ணுடல்: மலங்கழுவுவதற்குரிய கருவியாகிய வுடல். மண்: முதனிலைத் தொழிற்பெயர். மண்ணுதல் - கழுவுதல். (அ. சி.) அணுகினும் - சீவனுடன் இருந்தாலும். (9)
1. எழுமுடல். சிவஞானசித்தியார், 2. 3 - 2.
|