11. அழிப்பு 407. அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே.1 (ப. இ.) சிவபெருமான் அங்கியாகி மெய்யுணர்வுத் தீயினை அளித்தருள அத் தீயினைக் கொண்டே அகலிடத்தைச் சுட்டருளினன். சுட்டருளினன் என்பது பேரொடுக்கத்தைச் செய்தருளினன் என்பதாம். அதுபோல் அலைகடலையும் ஒடுக்கியருளினன். அதுபோல் முப்புரத் தசுரரையும் ஒடுக்கியருளினன். அதனால் அம் மெய்யுணர்வுத் தீ சிவபெருமானுக்குக் கைக்கணையாகும். கைக்கணை என்பது எப்பொருளும் அவன் நிலைக்களத்தே தங்குமென்பதாகும். என்னை? பிறிதோர் நிலைக்களம் இன்மையான் என்க. கை அம்பு - செயற்கருவி. (1) 408. இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால் உலைதந்த மெல்லரி போலும் உலகம் மலைதந்த மானிலந்2 தான்வெந் ததுவே. (ப. இ.) இலயங்கள் என்று சொல்லப்படும் ஒடுக்கங்கள் மூவகைப்படும். அவை நாளொடுக்கம், ஊழியொடுக்கம், பேரூழி யொடுக்கம் என்பன. அவற்றுள் ஊழி முடிவின் நிலைமை ஒருகாலத்து அழிந்தமையை அவனருளால் நின்றுணர்ந்தேன். உலைப்பானையிலிட்ட மெல்லிய அரிசி செவ்வியுற ஆக்கப்பெறும் அரி - அரிசி. அதுபோல் உலகம் உயிர்கள் செவ்வியுற அமைக்கப் பெறுவதற்கு நிலைக்களமாகும். சிற்றூழி முடிவில் மான் என்று சொல்லப்படும் மூலப்பகுதியால் தரப்படும் சில மண்ணுலகங்கள் அழியும். அம் மூலப்பகுதி மலைவாகிய மருளைத் தரும் தூவாமாயையினின்றும் தோன்றியது. மூலப் பகுதி தூவா மாயையில் தோன்றிய கலையினின்றும் தோன்றுவதாகும். கலையினை உழைப்பு மெய் என்ப. மூலப்பகுதியே முக்குண உறையுள் காமம் வெகுளி மயக்க விளைவுகள், ஆகமம் மூலப்பகுதியால், கலை மலவாற்றலிற் சிறிது நீக்குதலும் உயிராற்றலை விளக்குதலும் ஒருங்கு செய்யும். மலை - தூவா மாயை. அலைதந்த மானிலம் என்று கொள்ளின் சுவைத் தன்மையும் சேர்ந்த நாற்ற நுண்மையினின்று தோன்றிய நிலமென்க. நுண்மை - தன்மாத்திரை. (அ. சி.) இலயங்கள் மூன்று : - தினப்பிரளயம் - கற்பாந்தப் பிரளயம் - கடைப் பிரளயம். உலை தந்த மெல்லரி - உலையிலிட்ட அரிசி. அலை தந்த மானிலம் - அப்புவிலிருந்து உண்டான உலகம். (2)
1. இரும்பைக். சிவஞானசித்தியார் 1, 2. 2 - 6. " நிலையிலா. அப்பர், 4. 64 - 4. 2. வருங்குண சிவஞானசித்தியார், 2. 3 - 7.
|