495. அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச் செறிவா னுறைபதஞ் சென்று வலங்கொள் மறியார் வளைக்கை வருபுனற் கங்கைப் பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே. (ப. இ.) ஆதிப்பிரானாகிய சிவபெருமானை மறவாநெஞ்சினராய் உறவான பேரன்பர் விழைதக்க அமரர் எனப்படுவர். அத்தகைய அமரர் அவனை அவனருளால் உள்ளவாறு உணர்வார்கள். அமர்தல் - விரும்புதல். எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சிவபெருமான் அடியார்பொருட்டு ஆண்டாண்டு வெளிப்பட்டருளிய இடங்கள் உறைபதங்களாகும். அப் பதங்களே திருவூர்கள் எனவும், திருக்கோவில்களெனவும் சிறப்பித்துச் சொல்லப்படும். அடுக்கினாலும் நெகிழ்வினாலும் மறிந்துவீழும் அழகு சேர் வளைக்கையினையுடைய உலக அன்னையையொத்த கங்கை என்னும் தீர்த்தத்தில் 'என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே முன்னை நீபுரி நல்வினைப் பயனிடை' என்பதுபோன்று முன்னைப் புண்ணியப் பேறுடையார் பொறியார் ஆவர். அவர் இப்பொழுது முழுகுவதால் மேலும் மிக்க புண்ணியப் பேற்றினராவர். மறியார் வளைக்கையைக் கங்கைக்கு அடையாக்கலும் ஒன்று வலங்கொள் - வெற்றிகொள்ளுதல். அறிவார் - திருவருளால் உணர்வார். பொறியார்புனல் - புண்ணியநீர். (4) 496. கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல் உடலுற்றுத் தேடுவார் தம்மையொப் பாரிலர் திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென் றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.1 (ப. இ.) திருவருளுடன் மாறுற்றுச் சிவபெருமானைத் தேடப் புகுவார் கடலில் போகட்ட பொன்னைக் குளத்தில் தேடி எடுக்கத் துணிந்து குளத்தில் இறங்கி முயல்வாரோடு ஒப்பர். திருவருள்வழி நிற்பார்க்குச் சிவபெருமானாகிய நந்தி அத் திருவருள் வழியாக உடலிற் புகுந்து நின்றருளுவன். இவ் வுண்மை ஒன்றும் அறியாராகவும் சிலருளர். உடலுற்று - மாறுபாடுற்று. திடமுற்ற - ஆருயிர்க்குநிலைத்த சார்பான. நந்தி - சிவபெருமான். (5) 497. கலந்தது நீர துடம்பிற் கறுக்குங் கலந்தது நீர துடம்பிற் சிவக்குங் கலந்தது நீர துடம்பில் வெளுக்குங் கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.2 (ப. இ.) உடம்பு ஐம்பூதக் கூட்டம். அவற்றுள் நிலம் பொன்மை: நீர் வெண்மை; தீ செம்மை; காற்று கருமை; வானம் புகைமை. இத்திருப்பாட்டில் குறிக்கப்படும் கறுப்பு, சிவப்பு, வெளுப்பு ஆகிய மூன்றும் முக்குணங்களைக் குறிப்பன. இவற்றைத் திருவருள் துணையால் சிவ நினைவால் தூய்மைப்படுத்துவதே தீர்த்தமாடுவதாகும். (6)
1. தோற்றப். அப்பர், 4. 98 - 6. " நீற்றழகர் 12, ஏயர் கோன், 131. 2. பொன்பார், உண்மை விளக்கம், 6.
|