இரும் புனல்வெண் டிரைபெருகி யேலமில வங்கம் இருகரையும் பொருதலைக்கு மரிசிலின்றென் கரைமேல் கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே" - 7. 16 - 9. (அ. சி.) அசுரன் - சூரபன்மன். (1) 504. அண்டமோ டெண்டிசை தாங்கும் அதோமுகங் கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர் வெண்டலை மாலை விரிசடை யோற்கே.1 (ப. இ.) அண்டங்களையும், எட்டுத்திசைகளையும் முட்டின்றிக் காத்தருளும் சிவபெருமானின் நிலவறையாகிய கீழ்நோக்கிய திருமுகம் அதோமுகம். அம் முகத்தின் கண்டங்கறுத்தது குற்றம் பொறுத்ததேயாம். மற்றுக் கூறப்படும் புராணக்கதைகள் உருவகமேயாம். கண்டங் கறுத்த கருத்து: திருப்பாற்கடல் - ஆருயிர் நன்றாய்வாழச் சிவபெருமான் திருவருளால் நல்கிய உலகு உடல் உடைமைகளாம். கடைதல் - சிவனை மறந்து யான் என்னும் செருக்கொடு வானவர் தானவர் எனப்படும் இருவினைக்கண் முயலுதல். நஞ்சு - சிவபெருமானை மறந்ததாகிய குற்றம். அதுவே கறையாகும். அக் குற்றத்தை ஏற்றுப் பொறுத்ததே கண்டம் கறுத்ததாகும். இதுவே உண்மைக்கருத்து. நஞ்சு - வெறுப்பு. கண்டம் - வரம்பு; திருவருளாணை. (அ. சி.) அதோமுகம் - பிரகிருதிமாயை. (2) 505. செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப் பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள் மெய்யே யுரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன் மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே. (ப. இ.) பொருள்சேர் புகழுக்குரிய இறைமைக்குணம் இலராயினாரை மயக்கத்தால் இறையென்று கொண்டு முறையின்றிப் புகழும் பொய்யுரை மனிதர்களை மெய்ப்பொருளாம் சிவபெருமான் அறிவன். அச் சிவபெருமானை மெய்ப்புகழ் புகழ்ந்து வழிபடுவாரைத் தொழப்படும் தேவர்தம்மால் தொழுவிப்பன். இவ் வுண்மை வருமாறு: "முழுத்தழல் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்து எழிற்பரஞ் சோதியை எங்கள்பி ரானை இகழ்திர்கண்டீர் தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைத் தொழப்படுந் தேவர்தம் மாற்றொழு விக்குந்தன் தொண்டரையே." - அப்பர், 4: 113 - 5. செய்தான் ...வட்டத்து - உலக நிகழச்சிகளை அவ்வுலகை ஆக்கி நீக்கமற நிற்கின்ற சிவபெருமானே அறிவன். மெய்யேஉரைக்கில் - மெய்ப் பொருளாகிய சிவபெருமானைப் புகழ்ந்து வழுத்தினால் மை - மேகம் போலும் கருமை. (3)
1. பருவரை. அப்பர், 4. 14 - 1.
|