4. ஆகமச் சிறப்பு 68. அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம் எஞ்சலில் விஞ்ஞகர் இருபத் தெண்மரும்1 அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. (ப. இ.) நீலமேனி வாலிழைபாகத்தனாகிய சிவபெருமான் இருபத்தெட்டுத் தமிழ்ச் சிவாகமங்களையும் அருளிச் செய்தனன். குறையாத திருவடியுணர்வு கைவந்த மேலோராகிய விஞ்ஞகர் என்னும் நல்லார் இருபத்தெண்மரும் அவற்றைக் கேட்டுணர்ந்தணர். இருபத்தெட்டு ஆகமங்களையும் சிவபெருமான் தனக்குரிய ஒப்பில்லாத் திருமுகங்கள் ஐந்தனுள் உச்சித் திருமுகத்தால் உரைத்தருளினன். அவற்றின்கண் கூறப்படுவதே அரும்பொருள் என்க. அரும்பொருள் - முப்பொருளுண்மை. (அ. சி.) அஞ்சாமுகம் - ஈசானமுகம். (1) 69. அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம் விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே. (ப . இ.) தலைமைப்பாடுடைய சிவபெருமான் திருவருளால் அருளிச் செய்த இருபத்தெட்டு ஆகமங்களின் திருப்பாட்டுக்களின் தொகை இருபத்தெட்டுக்கோடி நூறாயிரமாகும். விண்ணவராகிய தூமாயையின்கண் வாழும் அருளோன் - சதாசிவப் பேற்றினர், சிவபெருமானின் விழுமிய மாண்பினை அவ்வாகம வழி உரைத்தருளினர். சிவன் திருவடியிணையினை ஓவாது அடியேனும் எண்ணி அவ்விழுப்பொருளை ஏத்துவன். (அ. சி.) நூறாயிரம் - இலக்கம் சூத்திரங்களையுடையன. (2) 70. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது அண்ணல் அறைந்த அறிவறி யாவிடின் எண்ணிலி கோடியும் நீர்மே லெழுத்தே. (ப. இ.) சிவபெருமான் திருவருளால் அருளிச் செய்த சிவாகமம் அயன் மால் உள்ளிட்ட தேவர்களாலும் விளங்கிக்கொள்ள முடியாத அருமையானது. அச் சிவாகமங்களின்கண் சிவபெருமான் அருளிச்செய்த மெய்ப்பொருள் உண்மை கைவரச் செய்யும் சிவவுணர்வுச் சிறப்பினை அறியாவிட்டால் அளவில்லாத அவை முற்றும் நீர்மேல் எழுத்துப்போல் பயன்தாரா தொழியும். (3)
1. (பாடம்) அஞ்சலிகூப்பி யறுபத்தறுவரும்.
|