291
 

648. அணிமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.

(ப. இ.) இத் திருப்பாட்டு எண்பேறுகளைத் தொகுத்துக் கூறுகின்றது. அணுவில் அணுவின் நேர்மை - நுண்மை. பெருமையின் நேர்மை - பருமை. நேர்மை - விண்தன்மை. இணுகாத நேர்மை - மென்மை. வேகார் நேர்மை - விரும்பியதெய்தல். பரகாயமேவல் - நிறைவுண்மை. எங்குமாம் நேர்மை - ஆட்சியனாதல். தனையொக்கும் தானாதல் - கவர்ச்சி.

(அ. சி.) அணுவில் அணுவின் நேர்மை - அணுவுக்கணுவாதல். பெருமையின் நேர்மை - பெரிதில் பெரிதாதல். வேகார் - வேகாத.

(29)

649. எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடு
மொட்டா நடுநாடி மூலத்த னல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே.

(ப. இ.) எண்வகை யோகத்தால் - எண்பேறு பெற்று உயிர்ப்பை அடக்கிக்கொண்டால், கிடைத்திடு....விட்டால் - கிடைத்தற்கரிய மாண்பினையுடைய நடுநாடி வழியாக மூலத்தீயைச் சூரியமண்டலமாகிய நெஞ்சத்தாமரையின்மேற் செலுத்தினால், மதி...மேலதே - புருவ நடுவாகிய திங்கள் மண்டிலத்தமிழ்துண்ணும் மேண்மையுண்டாம்.

(அ. சி.) கிட்டா - அடக்கமுடியாத.

(30)

650. சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.

(ப. இ.) அகத்தவமாம் எண்வகை யோகத்தால் சித்தியாம் எண்வகைப் பேறுகள் பெறுவதுமட்டும் அல்லாமல் பலவகை அறிவுகளும் புலப்படும். சித்திகள் எண்சித்தி - எண்பேறுகளும் இட வேறுபாட்டால் ஒவ்வொன்றும் எவ்வெட்டாக அறுபத்துநான்காம்: "பேய்களுக்கு இவ்வெட்டும் நிலவுலகத்தை வியாபித்துக் கூறியவாறேயுள்ளன. அரக்கருலகத்துள்ளார்க்கு நீருலகத்தையும் வியாபித்து இருமடங்கும், இயக்கருலகத்துள்ளார்க்குத் தீயுலகத்தையும் வியாபித்து மும்மடங்கும், காந்தருவ வுலகத்துள்ளார்க்கு வாயுவுலகத்தையும் வியாபித்து நான் மடங்கும், இந்திரவுலகத்துள்ளார்க்கு ஆகாயவுலகத்தையும் வியாபித்து ஐந்து மடங்கும், சோமலோகத்துள்ளார்க்கு மனத்தினையும் வியாபித்து ஆறுமடங்கும், பிரசாபதியுலகத்துள்ளார்க்கு ஆங்காரத்தையும் வியாபித்து ஏழுமடங்கும், பிரமலோகத்துள்ளார்க்குப் புத்தியையும் வியாபித்து எட்டுமடங்கும் ஏற்றமா யுள்ளனவாகலான், எண்வகைச்