(ப. இ.) பாற்கலத்தைப் பால்நோக்கிப் பேணுவதுபோல் உடம்பினுள் சிவபெருமான் உயிர்க்குயிராய்க் கோவில் கொண்டருளினன் என்னும் உண்மையுணர்ந்து அதனை அவனுடைமை என்று பேணுகின்றேன். இவ் வுண்மையுணராதகாலத்து அதனை இழுக்குடையதென்று எண்ணினேன். (2) 706. சுழற்றிக் கொடுக்கவே சுத்தி கழியுங் கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே. (ப. இ.) உயிர்ப்பினை உள்ளிழுத்து வெளிவிடும் முறைமைச் செயலால் சுடச்சுடரும் பொன்போல் அருள்ஒளி மிகும். அதனால் மலம் கழலும். மலங்கழல நெஞ்சத் தாமரை பொலிவுறும். எழுபத்தீராயிர நாடிகளிலும் சுழன்றுவரும் வழியை அறிபவர்க்கு உடல் துன்பம் தருவதைவிட்டுத் திருவடி இன்பத்தைத்தரும் மந்திர மைப்போல் ஆகும். சுழற்றி - சுழித்து. சுத்தி - புடம். உழற்றி - சுழன்றுவரச் செய்து. அஞ்சனம் - மந்திரமை. (அ. சி.) சுழற்றிக் கொடுக்க - பூரித்து இரேசிக்க. அஞ்சனம் - மறைபொருளாகிய சிவத்தைக் காட்டும் மை. (3) 707. அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில் வஞ்சக வாத மறுமத் தியானத்திற் செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும் நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.1 (ப. இ.) மூச்சுப் பழக்கத்தால் நுண்மை காட்டும் மைப்போல் உடல் தூய்மையுறும். காலைப்பயிலும் மூச்சுப்பழக்கத்தால் பித்தம் நீங்கும். நடுப்பகலிற் பயில்வதால் வாதம் நீங்கும். மாலையிற் பயில்வதால் ஐ (கோழை, கபம்) அறும். இம் மூன்றின் வேறுபாட்டால் உடற்கண் நிகழும் நஞ்சாம் நோய் அணுகாது அறும். அதனால் உடற்கண் நரை திரை தோன்றா. (அ. சி.) ஐ - கபம். நஞ்சு அற - விசம் நீங்க. (4) 708. மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள ஏன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம் 2நான்றவிம் முட்டை யிரண்டையுங் கட்டியிட் டூன்றி யிருக்க உடம்பழி யாதே. (ப. இ.) உச்சுவாசம் - மூச்சை உள்ளிழுத்தல். நிச்சுவாசம் - மூச்சை ஒடுக்குதல். இந் நிகழ்ச்சியைக் குறிப்பால் உணர்த்தும். எழுத்துக்கள் இரண்டு. அவற்றை உவமையில் காட்டும் பாம்பின் நிலை இரண்டு. எழுத்து உகரமும் அகரமும் பாம்பின் நிலை சிறிது தலைநிமிர்தலும்,
1. மிகினும். திருக்குறள், 941. (பாடல்) 2. நான்றவிழ்.
|