74. ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மையொன்று ஆக முடிந்த அருஞ்சுத்த சைவமே. (ப. இ.) மேல் (72) ஓதிய சிவன் முதலாகவுள்ள ஒன்பதின்மர் வழியாக வந்த சிவாகமங்கள் இருபத்தெட்டாகும். பிறப்பற்றுச் சிறப்புற்று வாழ வழிகாட்டுவதால் இவ்வாகமங்கள் ஏனைச் சமயத்தார் கூறும் வேதாகமங்கள் மயக்குவதுபோன்று மயக்குந் தன்மையன அல்ல. அதனால் இவை மோகமில் நூல்கள் என்று எல்லாரானும் பாராட்டப்படுவன. இவ்விருபத்தெட்டும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை திருக்கோவில், திருவுரு, நாள்விழா, சிறப்பு விழா முதலியன புரிய வேண்டிய முறைமைகளை வகுத்துக்கூறும் செய்கைப் பகுதியும், வழிபாட்டுப் பகுதியும், முப்பொருளுண்மை தப்பின்றித் தெளிக்கும் மெய்யுணர்வுப் பகுதியும் என மூன்றாம். இவை முறையே கரும காண்டம், உபாசனை காண்டம், ஞான காண்டம் எனப் பெயர் பெறும். கேடில்லாத வேதாந்த சித்தாந்த மெய்ம்மைகளாகிய முப்பொருள் முடிபுகள் ஒன்றாவனவே. ஆயின் இவை மூன்றும் முடிபிரண்டும் ஒன்றாக மேற்கொண்டு ஒழுகுவோர் சுத்த சைவர் எனப்படுவர். வேகம் - கேடு. கலப்பின்மை - தனிமை. (7)
5. அந்தண ரொழுக்கம் 75. அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர் செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்து அந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச் சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. (ப. இ.) அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவோர் அறவோர். அவர் பிறப்பற முயலும் பெற்றியர். இறைபணி நிற்கும் முறையினர். அதனால் அவர் தம்முனைப்பற்று அருள் முனைப்பால் செய்யும் இருளில் தொழிலினர். அதனால் அத் தொழில் அறு தொழில் என வழங்கப்பட்டது. அறுதொழில் என்பது தொழிற்பயன் செய்தாரைச் சாராது அற்றதொழில் என்பதாம். இத் தொழிலினை ஏறுவினை என்பர். ஏறுவினை எனினும் ஆகாமியம் எனினும் ஒன்றே. இதற்கு அற்றதொழிலெனப் பொருள் கொள்ளாது, ஆறுவகைத் தொழிலெனக் கூறுதலுமுண்டு. அவை வருமாறு: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈவித்தல் என்பன. இவற்றுள் ஈவித்தலை விடுத்து ஏற்றல் எனக் கூறுவாரும் உளர். செய்ய வேண்டுங் காலங்களில் எல்லாம் செந்தழல் ஓம்பும் செம்மையர். உரிய காலங்கள் எல்லாம் என்பதே முப்போதும் என்பது. நியமம் செய்தல் என்பது இயம நியமம் எனக் கூறப்படும் எண்வகை யோகவுறுப்புக்களுள் ஒன்று. அதனை இயற்றல் என்பதாம். அல்லது தவறாது செய்வேமென மேற் கொண்ட செய்கை எனினுமாம். அவர்கள் குறிக்கோள் கொள்ளுதலாகிய
|