712. உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச் சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே. (ப. இ.) கொப்பூழின்கண் தோன்றுகின்ற உயிர்ப்பினைச் 'சிவ சிவ' என நினைந்து உச்சித்தொளையில் நிறுத்திக் கீழ்நோக்கிச் செல்லுங் காற்றைச் செல்லவொட்டாது மேல்நோக்கிச் செலுத்தின், அங்ஙனம் செலுத்துபவன் சிவனாம்தன்மை எய்துவன். முகடு - உச்சித்தொளை. சிவமந்திரம் என்பதனை, முன்மொழி (ஓம்) அல்லது அம்சம் எனவும் கூறுவர். அம்சம் என்பது ஆவியின் மறை என்ப. இம் மறையுணர்ச்சி காணும் வகை: உயிர்ப்பு உள்ளிருந்து வெளிவருங்கால் அம் என்னும் ஓசை உண்டாகும். வெளியிலிருந்து உள்வருங்கால் சம் என்னும் ஓசை கேட்கும். மறை - மந்திரம். (9) 713. மாறா மலக்குதந் தன்மே லிருவிரற் கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின் ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் கூறா உபதேசங் கொண்டது காணுமே. (ப. இ.) நீங்கா மலம்பொருந்திய எருவாய்க்குமேல் இருவிரலும் குறிக்குக் கீழும் உள்ள இடத்தை உன்னிப் பார்மின்; ஒழியாத உடம்பினுள் முழுமுதல் தலைவனும் அங்கு வெளிப்படுவன். ஊமை எழுத்து அல்லது பேசா எழுத்தினைக்கொண்டு காண்மின். குதம் - எருவாய். இலிங்கம் - குறி. ஆறா - ஒழியாத. கூறா - பேசா. (10) 714. நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவர் பராநந்தி ஆணையே.1 (ப. இ.) திருவருளையே புகலிடமாகக் கைக்கொண்டிருப்பார்க்கு உலகறிய நரை திரை மாறிடும். அருளாகிய தாய்வழி நிற்கும் பொருட் சேய் ஆவர். பாலன் - முருகன்; இவர் சூர்மா கொன்றனர். ஆவிப் பாலர் அருள் துணையால் இருண்மாகொல்வர். (11) 715. அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டங் கறுத்த கபாலியு மாமே.2
1. பொரும்பல. ஆரூரர், 7: 16 - 9. 2. அற்றால். திருக்குறள், 643. " இழிவறிந். " 944.
|