314
 

721. உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்
கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியா தழிகின்ற வாறே.1

(ப. இ.) தம்கண் உற்றவற்றைத் தனித்தனியுணரும் ஐம்புலவுணர்வின் உண்மையறிந்தவர் நற்குணப் பெருக்கம் ஏழும் நன்கறிவர்; மெய்யுணர்வின் முதல் எட்டையும் பொருந்துவர்; சிவனிலை ஒன்பதையும் சேர்வர். முனைத்துச் செலுத்தும் காற்றுக்கள் பத்தினையும் அடக்குவர். பலகாலங்கள் ஒடுங்கியிருப்பர். அக் காலங்கள் சென்றமையும் அறியார்: ஐந்து : நாற்றம், சுவை, ஒளி, நற்காற்று, வெளி. நற்குணம் ஏழு : ஆட்சி, ஆண்மை, அரும்புகழ், அழியாத் திரு, திருவடியுணர்வு, பற்றின்மை, பரனடிப்பற்று. மெய்யுணர்வுமுதல் எட்டு: "உம்மையின் வாசனைபற்றி முன்னொடுபின் மலைவின்றிப் பொருந்துமாற்றாற் பொருள்களை ஆராய்ச்சிசெய்து உய்த்துணரும் ஞானம் ஒன்று, தன்னைப்பற்றி வருவன, பிற வுயிர்களைப் பற்றி வருவன, தெய்வத்தைப் பற்றி வருவன என்னும் வாயில்களான்வரும் மூவகைத்துக்கத்தான் மடிவுவந்துழி நிகழ்வனவாகிய ஞானம் மூன்று, நட்டோர் கூறும் வாயுறை மொழியான் வரும் ஞானம் ஒன்று, மெய்ப்பொருள் நூல்களைத் தானே ஓதி உணர்தலானும், ஆசிரியனை வழிபட்டு ஓதியுணர்தலானும் வரும் ஞானம் இரண்டு. தான முதலிய நல்வினைகளான் வரும் ஞானம் ஒன்று." சிவனிலை ஒன்பது: அறிவு, ஆற்றல், ஓசை, ஒளி, அருளோன், ஆண்டான், அழிப்போன், அளிப்போன், அமைப்போன், அறிவு - சிவம், ஆற்றல் - சத்தி. ஓசை - நாதம். ஒளி - விந்து. உயிர்ப்பு: பத்து (300 பக்கம் காண்க).

(அ. சி.) ஐந்தும் உணர்ந்தறிவார் - புலன்வழிச் செல்லாதார்.

(2)

722. அழிகின்ற ஆண்டவை ஐயைந்து மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்பது
எழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே.

(ப. இ.) இத் திருப்பாட்டில் உலகோர் கூறும் உடற்குஉறும் கண்டங்கள் கூறப்படுகின்றன. அவற்றின் ஆண்டுக்கணக்கு இருபத்தைந்து முதல் இருபத்தெட்டு, முப்பது முதல் முப்பத்து மூன்று, அறுபது முதல் அறுபத்திரண்டு, நூறு என்ப. மேலும் பலவுள. அவற்றைக் கோள்நூற்களுட் காணலாம்.

(அ. சி.) அழிகின்ற ஆண்டு - கண்டங்கள். ஐயைந்து மூன்று - 28 - வது வயது; ஒரு கண்டம். முப்பத்து மூன்று - 33 வது வயது ஒரு கண்டம். அறுபத்திரண்டு - 62 - வது வயது ஒரு கண்டம். ஈரைம்பது - 100 - வது வயது ஒரு கண்டம்.

(3)


1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2.