கண்ணும் உறைந்திடும் சிவபெருமான் திருவருள் புரிவன். ஆவிகள் அவனாக விளங்கும். (26) 746. அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக் கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவனிவ னாகுமே.1 (ப. இ.) அண்ணலாகிய சிவபெருமான் ஆவியுடன் கலந்துறையும் உண்மைநிலையை யாரும் தம்மறிவால் தெளிந்திலர். திருவருள் துணையால் அவ் வுண்மைநிலையைத் தெளிவார்க்கு அண்ணல் மறைவின்றி அறிவுக்கறிவாய் விளங்கி வெளிப்படுவன். அங்ஙனம் வெளிப்படின் சிவன்நிறைவினுள் கோலத்தினுள் கோலங்கொள்வார். அடங்கு மாறுபோல ஆவியடங்க அக் கோலமே கோலியாகாத் திகழ்வதுபோல் ஆவியாகிய இவன் சிவனாகவே திகழ்வன். அழிவின்றி - மறைவின்றி உள்ளே அமர்ந்திடும் - அறிவுக்கு அறிவாய் வெளிப்படும். (27) 747. அவனிவ னாகும் பரிசறி வாரில்லை அவனிவ னாகும் பரிசது கேள்நீ அவனிவ னோசை ஒளியினுள் ஒன்றிடும் அவனிவன் வட்டம தாகிநின் றானே. (ப. இ.) சிவன் ஆவியாய்நிற்கும் மெய்ந்நிலையை அறிவார் அரியர். அவனிவனாகும் பரிசினைக் கேட்பாயாக. ஓசையும் ஒளியும்போல் சிவனும் ஆவியும் கலந்து நிற்கும். அஃது ஓ மொழியின்கண் அகரம், உகரம், மகரம், ஒளி (விந்து), ஓசை (நாதம்) கலந்து வட்டமாய் நிற்பதையொக்கும். அவனிவனாகும் தன்மை ஒட்டில் உண்டாகும். ஒட்டு - திருவடிப்பேறு. கட்டில் இவன் அவனாகும். இது 'கட்டுங்கால் நார் முன்னாம் கண்ணிக்கால் பூமுன்னாம், ஒட்டிலிறை முன்னுயிர்பின் ஓது' என்பதனால் உணர்க. நார் - ஆர்உயிர். பூ - பேர் உயிராம் சிவன். (அ. சி.) ஓசை - நாதம். வட்டம் - பிரணவம். (28) 748. வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர் ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக் கட்டி இருப்பிடங் காணலு மாகுமே. (ப. இ.) நிலைகள் ஆறும் மேலுள்ள திங்கள் மண்டிலமும் ஆகிய ஏழுவட்டங்கள் ஏழும் ஆவியினுள் மலர்ந்திடும். ஆண்டு எழுந்தருளியுள்ள சிவன்நிலை யுணர்கிலீர். திருவருளோடு உடனாய் நின்று உணர்ந்திடக் கட்டியாகிய சிவபெருமான் நிலையினைக் காணலாகும். (அ. சி.) வட்டங்கள் ஏழு - ஆதாரங்கள் ஆறும் சகசிர அறையாகிய மதிமண்டலமும் ஆக ஏழு. கட்டி - கருப்புக்கட்டி போன்ற சிவம். (29)
1. இவனுலகி. சிவஞானசித்தியார், 10.
|