325
 

(ப. இ.) சரவோட்டம் பத்து எண்வரை நின்று முடிவுபெறில் இருபத்தெட்டு ஆண்டு அகவை என்பர். பதினைந்து ஓடி அகன்று நிற்பின் அகவை இருபத்தைந்தென்ப.

(7)

757. பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகுந் திருத்திய பத்தே.

(ப. இ.) பகல் முப்பது நாழிகையும் பன்னிரண்டு கூறிட்டுச் சரவோட்ட எண்ணை மேலோதியவாறு பகுந்து ஒழுகுதல் வேண்டும். ஒற்றைப்பட எண் வருமானால் அவற்றை இரட்டைப்பட வருமாறு அமைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

(8)

758. ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
பாயிரு நாளும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமே.

(ப. இ.) பொருந்திய நாட்கள் இரண்டிலும் இயற்கைமுறையாக ஓடினால் அந் நாட்கள் அகப்பகை புறப்பகை இல்லாதகலும், ஓட்டம் இளைத்து மூன்றெண்ணுக்கு வருமானால் ஆராயப்படும் உருவவகை யென்று ஆராய்ந்து கூறலுமாம்.

(9)

759. அளக்கும் வகைநாலும் அவ்வழி யேஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே.

(ப. இ.) ஆராயும் அவ் வோட்டம் நான்காக ஓடினால் விளக்கமுற அவ்வொரு நான்கும் மெய்க்கண் பொருந்திநிற்கும். அவ் வசைவு ஐந்தாக ஓடினால் குற்ற மூன்றில் முடிவதையும் காணலாம்.

(10)

760. காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே.

(ப. இ.) அவ் வோட்டம் பத்தாயின் பகை உறவு இரண்டினையும் காணலாம். பதினைந்து ஓடின் கருத்திற் பொருந்த உறவொன்றே காணலாகும்.

(11)

761. கருதும் இருபதிற் காணஆ றாகும்
கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடனாறு காணிற்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே.