(அ. சி.) காயக்குழலி - மனதை வெதுப்புகின்ற அப் பெண் (காய் அக் குழலி). ஊசித்துளை - ஊசிக் காதுபோன்ற துளை. (1) 806. போகத்தை யுன்னவே போகாது வாயுவு மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில் சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந் தாதிற் குழைந்து தலைகண்ட வாறே. (ப. இ.) இன்பத்துறையாகிய போகத்தை நினைத்தால் உயிர்ப்பு நடு நாடிவாழியாற் செல்லாது. பெருவேட்கையால் வெள்ளியாகிய விந்துவும் வியாழமாகிய நாதத்தில் மீளும். சூதுக்காயை ஒத்த மெல்லிய முலையை உடையவளும், நன்மைக்குரிய ஆடவனும் தம்மிற்கூடி நாத விந்துக்களின் குழைவால் இன்பந்தலைகண்ட முறைமையாகும். சூதம் - வாதரசம்; குளிகை. பரிபாசை - குறியீடு. (அ. சி.) வெள்ளி - விந்து. வியாழம் - நாதம். சூது - சூதாட்டத்தில் உபயோகப்படும் கருவி. சூதன்-ஆடவன். விந்துவை இரசம் என்றும் நாதத்தைக் கந்தகம் என்று கூறுவது சித்தர்களுடைய பரிபாசை. (2) 807. கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும் வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத் தண்டொரு காலுந் தளராது அங்கமே. (ப. இ.) சாலந்திரத்தால் ஒடுக்கப் (801) பட்ட கழுத்தையுடைய ஆடவனும் அம்முறையே ஒடுக்கப்பட்ட கழுத்தையுடைய மகளிரும் காதலித்துப் பயிலும் பரியங்கயோகப் பயிற்சி வயத்தால் ஞாயிறு திங்கள் மண்டிலங்களாகிய முறையே மிடற்றினிடத்தும் உச்சியினிடத்தும் உயிர்ப்பினைச்செலுத்தி உரித்தாக்கிக் கொண்டால், அவர்கள் இரண்டு பக்கமும் வெளியிற்காணும் இடமூக்கும் வலமூக்கும் ஆகிய வண்டியை மேற்கொண்டு மேலாந் தன்மை வாய்ந்த ஓசை ஒளியென்னும் நாதவிந்துக்கள் திரண்டுருண்டு கைவருமாறு செய்வர். அப்படிச் செய்தால் முதுகந்தண்டு ஒருகாலும் தளராது. தளராதாகவே உடலுக்கும் அழிவில்லை. பரிதியாகிய ஞாயிற்று மண்டிலம். கொப்பூழ் முதல் மிடற்று வரையுள்ள இடமாகும். மதியாகிய திங்கள் மண்டிலம், மிடறு முதல் ஆயிர விதழ்த்தாமரைக் களமாகிய உச்சிவரையுள்ள இடமாகும். வானீர். உயர்ந்த தன்மை வாய்ந்த: நாதவிந்துக்கள். அங்கம்: உடல். வான் - உயர்வு. (அ. சி.) கண்டனும் கண்டியும் - கண்டத்தைக்கொண்டு கருமம் முடித்த ஆடவனும் மாதும். வண்டி - இடகலை, பிங்கலை. வானீர் - அமுதம் தண்டு - தேகம். (3) 808. அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவம் அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப் பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத் தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே.
|