ஒருநாளைக்கு ஒரு மிளகு விழுக்காடு நூறுநாளைக்கு உண்ணுதல் வேண்டும் எனவும் கூறுவர்). உச்சி - பிரமரந்திரம். (அ. சி.) கப்பு - சேர். (3) 828. கரையரு கேநின்ற கானல் உவரி வரைவரை என்பர் மதியிலா மாந்தர் நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு நரைதிரை மாறு நமனுமங் கில்லையே. (ப. இ.) கொப்பூழின்கீழ் கரை அருகே நின்ற பருகலாகாத் தோற்றமுடன் நின்ற உப்புநீர் (சிறுநீர்) பயிற்சியிலா மாந்தர் அதனைக் கழிகழி என்று கரைவர். சாரமற்றதாகிய நுரையும் பித்தப்பாங்காகிய திரையும் அகற்றி அமிழ்தாக்கி மேலேற்றுதலாகிய துகர்தலைச் செய்ய வல்லார்க்கு நரைதிரை ஏற்படாது. அவர்கட்குக் கூற்றுவன் வருதலாகிய இறப்பும் இல்லை. (அ. சி.) உவரிக்கரையருகே நின்ற காணல் - உப்பு நீர்ப்பையருகே உள்ள விந்து. வரை வரை - ஒழி ஒழி; கழி கழி. (4) 829. அளக நன்னுத லாயோ ரதிசயங் களவு காயங் கலந்தஇந் நீரிலே மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில் இளகும் மேனி இருளுங் கபாலமே. (ப. இ.) எழில் வாய்ந்த இருங்கூந்தலையுடைய பெண்ணே! வியத்தகு புதுமையொன்று விளம்புவேன் கேட்பாயாக. உடம்பகத்து மறைந்து விரவிய இச் சிறுநீரிலே புறத்து மருந்து முறையாக மிளகு நெல்லி மஞ்சள் வேம்பு ஆகிய நான்கும்கலந்து கைக்கொண்டால் உடம்பு மென்மைப்பொலிவு எய்தும். மண்டைமயிரும் கொண்டலொத்துக் கருமையாகும். (அ. சி.) களவு - களவு, கற்பு என்னும் இருமுறைகளில் ஒன்று. மிளகு...வேம்பு - இந் நான்கும் அரைத்து, பாலுடன் கலந்து, தலைக்குத் தேய்த்து முழுகுவது கற்பமுறை. (5) 830. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும் நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான் ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ் கோதி மருந்திது சொல்லவொண் ணாதே. (ப. இ.) சிறந்த மருந்தென்றும், தெய்வமருந்தென்றும், திருவருள் மருந்தென்றும் நந்தியெங்கடவுள் நவின்றனர். உண்மையுணர்வார் இதனை ஆதிமருந்தெனவும் அகன்ற உலகினை விளக்கும் உடலொளி விளக்கு இதுவாகும் எனவும் மொழிந்தார். இம் மருந்தின் பெருமை இயம்புதற்கரிது. விண்ணோர் - தெய்வம். நாரி - திருவருள். (6)
|