838. அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத் தங்கிய தாரகை யாகுஞ் சசிபானு வங்கிய தாரகை யாகும் பரையொளி தங்க நவசக்ர மாகுந் தரணிக்கே. (ப. இ.) தீயினின்று வெளிப்படும் நுண்கதிர்கள் இரண்டும், ஞாயிறு. திங்கள், விண்மீன்கள் எல்லாவற்றுடனேயும் விரவி விளக்கும். திருவருள் பரவெளியில் திளைத்தலும், புதிய மறைவழி (நவசக்கரம்) ஆதலும் ஆகும். சின்னக்கதிர் - நுண்கதிர். ஆட்டல் - விளக்கல். தாரகை - ஒழுங்கு. வங்கிய தாரகை - கூட்டமான விண்மீன்கள். (அ. சி.) வங்கிய - கூட்டமான. (8) 839. தரணி சலங்கனல் கால்தக்க வானம் அரணிய பானு அருந்திங்கள் அங்கி முரணிய தாரகை முன்னிய ஒன்பான் பிரணவ மாகும் பெருநெறி தானே.1 (ப. இ.) நிலம், நீர், தீ, காற்று இந் நான்கற்கும் இடங்கொடுத்துக் கொண்டிருக்கும் தக்க வானம், அழகிய ஞாயிறு, ஞாயிற்றின் ஒளிபெற்று விளங்கும் திங்கள், சிவவேள்வித்தீ, வலிமைமிக்க விண்மீன்கள் ஆகிய ஒன்பதும் பிரணவமாகிய ஓங்காரத்துள்ளொளியாம் சிவபெருமானின் சார்புருவமாகும். இவற்றை மேற்கொண்டொழுகுவது சித்தாந்த சைவப் பெருநெறியாகும். தரணி நிலம். சலம் - நீர். கனல் - தீ. அரணிய - அழகிய. அங்கி - சிவ வேள்வித்தீ; காட்டுத்தீ, வீட்டுத்தீ, பாட்டுத்தீ (இம் மூன்றும் முறையே ஆகவனீயம், காருகபத்தியம், தெக்கணாக்கினி என்ப). முரணிய - வலிமைமிக்க. பாட்டு - ஞானம். (9) 840. தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத் தாரகை மின்னாச் சசிவளர் பக்கத்துத் தாரகை பூவிற் சகலத்தி யோனிகள் தாரகைத் தாரகை தானாஞ் சொரூபமே2 (ப. இ.) தேய்பிறையில் விண்மீன்கள் விளங்கி மின்னும், அது போல் வளர்பிறையில் அவைகள் மின்னா. உலகவுயிர்கள் அனைத்தும் உடலெடுக்கும் பிறப்பு விண்மீனைக்கொண்டே காணப்படுகின்றது. அதனால் உலகனைத்தும் விண்மீன்களின் உருவமே என்று உருவகம் செய்வது பொருந்தும். ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் என்றே வழங்குகின்றோம். நாள் - நட்சத்திரம். (இத் திருமந்திரம் ஆவி அறியாமை வயப்பட்டுத் தன்முனைப்போடுள்ள காலத்துத் தேய்பிறையில் விண்மீன் வெளிப்படுவதையும், திருவடி யுணர்வு வெளிப்பட்டுத் தன் முனைப்பற்று அருள்வழியில் ஆவி அடங்கிநிற்கும் நிலையின்கண் விண்மீன் வெளிப்படாமையினையும் குறிப்பிற் புலப்படுப்பதாகும்.)
1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4: 2. " ஒருசுடரா. அப்பர், 6. 39 - 10. 2. வெய்யோ. சிவஞானபோதம், 5. 2 - 2.
|