36
 

6. ஆகுதி வேட்டல்

85. வசையில் விழுப்பொருள் வானும் நிலனுந்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.

(ப. இ.) மலப்பிணிப்பும் அது காரணமாக நேரிடும் பிறப்பும், இறப்பும், இருவினையும், மருளும், வினைநுகர்வும் முதலிய உயிர்க் குற்றங்கள் வசை எனப்படும். அத்தகைய வசை ஏதுமில்லாத விழுப்பொருளாம் சிவபெருமானை, ('அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு அல்லல் இல்லையாதலின்' அத்தகையோர் அசைவிலார் எனப்படுவர்.) அசைவிலா அந்தணர் பாலவியால் ஆகுதி வேட்பர். அவ் வேள்விப் பயனால் வானும் நிலனும் திசையும் மாறா வளம் பெற்றுச் செழிப்பினை எய்தும். அவ்வத்திசையின்கண் வாழும் தெய்வங்களும் அத் தெய்வ இனங்களாகிய கூட்டங்களும் உய்வினை எய்தும். தன்வழி யொழுகும் தக்காரனைவர்கட்கும் தீதொரீஇ நன்றின்பால் உய்க்கும் வழி காட்டுவதால் மறை வெற்றியைத் தரும் விழுமியதாயிற்று. எனவே வெற்றியினைப் பெருகச் செய்யும் வேதத்தை முதன்மையாக வைக்கப் பெற்றது. அதனை முதன்மையாகக் கொண்டு சிவ வேள்வி வேட்பதே தவலில் தவ வேள்வியாம்.

(அ. சி.) ஆகுதி வேட்டல் - ஆவின் நெய்யைப் பறப்பையில் விட்டு எரி வளர்த்து, எரியுருவராகிய சிவபெருமானை வணங்கல். பறப்பை - சிருக்கு - சிருவம்.

(1)

86. ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.

(ப. இ.) அருமறை வழியே நெய்சொரிந்து வேள்விவேட்கும் அந்தணர் திருவடியுணர்வால் மீளா நிலையாம் சிவப்பேற்றினை எண்ணி, பிறழா நிகழ்ச்சியாம் ஊழ்ப் பயனை உள்ளங் கொள்ளாது உடலூழாய் நுகர்வர் அவ்வந்தணர் ஏறு வினையாகிய ஆகாமியத்தை ஆண்டவன் ஏற்று விதியாக்கும்படி விரும்புவர். அதன் பொருட்டு மெய்ந்நெறியினைத் தலைப்படுவர். மேலும் திருவடியுணர்வால் சுட்டுணர்வும் சிற்றுணர்வும் நீங்கி முற்றுணர்வுள் தம்மறிவு அடங்கித் தாம் அவ்வறிவாகவே நிற்பர். அதனால் தாமறிவாலே அவ் வந்தணர் திருவடியைத் தலைப்பட்ட முறைமையாகும் என்றனர். தலைப்படல் - அன்புடன் சேர்தல்.

(அ. சி.) போகதி - முத்தி மார்க்கம்.

(2)

87. அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத் தியங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.