காரணமாம் அருவுருவத் திருவுரு என்று ஓதப்பெற்றுள்ளது.1 இத் திருவுரு அடி நடு முதல் என முப்பகுப்பினையுடையது. அடிப்பகுதியில் 'அ' எனவும், நடுப்பகுதியில் 'அர' எனவும், முடிப்பகுதியில் 'இ' எனவும் எழுத்துருவில் அமைத்துக்கொள்ளுதல் வேண்டும். அ என்பது அறிவினையும், அர என்பது தொழிலினையும், இ என்பது இன்பத்தினையும் குறிக்கும். மகரத்தையிட்டு உச்சித்தொளையின்கண் உயிர்ப்புச் செல்லுவதை யுணர்ந்தபின் அவ்விடத்துத் தொம்தோம் என்று திருக் கூத்தியற்றும் சுடர்க்கொழுந்தினைக் காணுதலாகும். மேல் உச்சித் தொளை. வளி - உயிர்ப்பு; பிராணவாயு. தொம் - ஒலிக்குறிப்பு. தோம் என்பது குறுகியதெனக்கொண்டால் தமிழின் அடையாளமாகிய தகரத்தின்மேல் நின்ற ஓங்காரம் எனக்கொள்ளுதல் வேண்டும். இது திருமுறை பன்னிரண்டும் 'தோ' எனத் துவங்கி 'ம்' என முடியும் சிறப்பினை ஒத்ததாகும். தோம் என்பது தமிழ் ஓம் என்றாகும். (அ. சி.) அவ்விட்டு - அகரத்தை எழுதி. அரவிட்டு - அதன்மேல் அர என்பது எழுதி. இவ்விட்டு - அதன்மேல் இ எழுதிப் பார்க்கில் சிவலிங்கமாம். தொம் - தகர ஒகரம். (19) 913. அவ்வுண்டு சவ்வுண் டனைத்துமங் குள்ளது கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாரில்லை கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச் சவ்வுண்ட சத்தி சதாசிவன் தானே. (ப. இ.) அகரமும் சகரமும் அங்குண்டு. இவ் விரண்டும் சிவம் சிவை என்னும் அத்தன் அன்னையைக் குறிக்கும். ஈண்டுக் கூறப்படும் அகரம் அடியையும், சகரம் சடையையும் குறிக்கும். இவ்விரண்டும் ஆருயிர்களுடன் பின்னிக்கொண்டு நிற்கும் திருவுள்ளப்பெற்றி அறிவாரில்லை. அத் தன்மையின் மெய்ம்மையினை அறியும் அடியவர்க்கு அச் சகரத்தின் வண்ணமாம் சதாசிவன் தோன்றும். (அ. சி.) சவ்வுண்ட சத்தி - ச என்னும் பீசமந்திரத்துள்ள சத்தி. (20) 914. அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம் அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம் அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே.2 (ப. இ.) நந்தியாகிய சிவபெருமான் திருஐந்தெழுத்தாகவே அமர்ந்தருளினன் அஞ்சு சொற்களின் முதலெழுத்துக்களாகிய அஞ்செழுத்தாலாகியது பஞ்சாக்கரம். இவ் வைந்தெழுத்துக்களாலேயே சக்கரங்கள் அமைக்கப்படும். அதனுள் அமர்ந்துறைபவன் விழுமிய முழுமுதற்சிவன், அஞ்செழுத்தின் விரிவாம் அஞ்சு அஞ்சொல்: சிறப்பு (சி) வனப்பு (வ) யாப்பு (ய) நடப்பு (ந) மறைப்பு (ம). (21)
1. காணாத. 12. சாக்கிய நாயனார், 8. 2. அஞ்செழுத்தே. உண்மை விளக்கம், 45.
|