(ப. இ.) அன்பாகிய உலகியலும் அருளாகிய வீட்டியலும் சிவன் திருவடியாலாகுவன். அத் திருவடிக்கண் நகரம். கொப்பூழின்கண் மகரம். இருதோளின்கண் சிகரம். வாயின்கண் வகரம். திருமுடியின்கண் யகரம். இம் முறையாக அம்பலவாணரின் அருமறைத் தமிழ்த் திருவுரு அமைப்பர். சுடர் - திருமுடி. சிஇரு என்பது நீட்டும் வழி நீட்டலாய்ச் சீ என்றாயிற்று. (அ. சி.) பாதமுமந் நவ்வாய் - நகரம் திருவடி. நாபியுளங்கே மகாரமாய் - மகரம் நாபிக்கமலம். சி இருதோள் - சிகரம் இருதோள்கள். வவ் வாய் - வகரம் வாய். அச் சுடர் யவ் வியல்பு - யகரம் சுடர் அல்லது புருவமத்தி. (28) 922. அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையுஞ் செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும் ஒவ்வியல்1 பாக ஒளியுற நோக்கிடிற் பவ்வியல் பாகப் பரந்துநின் றானே. (ப. இ.) மேல் ஓதிய திருவைந்தெழுத்தின் செவ்விய தன்மையாகச் சிவனும் சிறந்தனன். ஓங்கார இயல்பாகப் பேரொளி எங்கணும் ஓங்கும். திருப்பாட்டாகத் திகழும் தமிழ்த்திரு நான்மறையாக நிறைந்து நின்றனன் சிவபெருமான். இருமூன்று: 2 + 3 - 5 - திருவைந்தெழுத்து. ஒவ்வியல்பு: ஓங்கார இயல்பு. மந்திரங்களை உய்த்துணருமாறு எழுத்துக்களை மாத்திரை கூட்டியும் குறைத்தும் வழங்குவர். கூட்டி வழங்குவது சிவ என்பது சிவா என நீள்வதாம். குறைத்து வழங்குவது ஓங்காரத்தை ஒவ்வாக வழங்குவதாம். (அ. சி.) இரு மூன்று எழுத்து - பிரணவமும் ஐந்தெழுத்துக்களும். ஒவ் வியல்பு - பிரணவத்தின் இயல்பு. பவ் வியல்பு - பர இயல்பு; செய்யுள் வடிவமான தமிழ் நான்மறைகளின் இயல்பு. (29) 923. பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம் வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித் துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போக உரந்தரு மந்திரம் ஓமென் றெழுப்பே. (ப. இ.) அவ்வுண்டு (913) என்பது முதல் இதுவரையும் சிவ மந்திரங்கள் விளக்கப் பெற்றன. இவை எல்லா உயிர்கட்கும் வேண்டும் வரந்தரு மந்திரமாகும். அம் மந்திரம் பிறவியாகிய பெரும் பகையை நீக்கும். ஓமென்று உள்ளன்புடன் கணிக்கத் திருவருளாற்றல் கைகூடும். எழுப்பவே என்பது எழுப்பே என்று திரிந்துநின்றது. துரந்திடும் - நீக்கும். (அ. சி.) பரந்தது மந்திரம் - மந்திரங்கள் இவ்வாறு பரவின. சூழ் பகை - பிறப்புக்குக் காரணமான இன்ப துன்பங்கள். (30) 1. அவ்வுட. சிவஞானசித்தியார், 4. 1 - 2.
|