936. நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று பாவிக ளத்தின் பயனறி வாரில்லை ஓவிய ராலும் அறியவொண் ணாதது தேவியுந் தானுந் திகழ்ந்திருந் தானே. (ப. இ.) கொப்பூழின்கீழ் மூலத்திடத்துத் திகழும் ஒன்று நல்ல எழுத்தாகிய ஓங்காரம். சிவசிவ என்கிலாத் தீவினையாளர் இதன் பயனை அறிகின்றிலர். படைப்போன் முதலாகிய தேவர்களாலும் அறிதற்கரியது. அம்மையோடு சிவபெருமான் ஆண்டுச் சிறந்திருந்தனன். நாவி - நாபி; கொப்பூழ். பாவிகள் - தீவினையாளர். ஓவியர் - படைப்போன் முதலிய தேவர். (அ. சி.) நாவி ....ஒன்று - பிரணவம். (43) 937. அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம் அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர் அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின் அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே. (ப. இ.) அகரமும் சகரமும் அரனுக்குரிய மந்திரமாகும். மகரத்துடன் கூடிய சகரம் - சம். இதனை யாரும் அறிகிலர். அகரத்துடன் கூடிய சகரமாகிய ச, என்னும் மறையினை எல்லாரும் அறிந்தபின், அகர சகரங்கள் - தொன்மையனவாகும். அனாதி - தொன்மை. இதனை அசபை என்பர். அசபை - அசபா: சபிக்கப்படாதது (அசம்). (அ. சி.) அவ் ...மந்திரம் அசபா மந்திரம். (44) 938. மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்குஞ் சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்1 2நந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே. (ப. இ.) திருவைந்தெழுத்தே வழிபாட்டு முதன்மை மந்திரம். அதனை நெஞ்சத்தினிடத்து உயிர்ப்புடன் கணிக்க மலர் வழிபாடு - அருச்சனையாகும். கொப்பூழின் உள்ளே உயிர்ப்புடன் கணிக்க ஓம வேள்வியாகும். புறத்தே சந்தி செய்கின்றவர் இவ் வுண்மையினை உணரார். நந்தியாகிய சிவபெருமானைத் தொழுததாக எண்ணி ஆரவாரித்து நீங்குவர். உள்மலர் - நெஞ்சத்தாமரை; அனாகதம். கொப்பூழ் - சுவாதிட்டானம். அந்தி என்ற பாடத்திற்குப் பேர் கொண்ட பார்ப்பார்க்கு அந்தி வழிபாடே சிறந்ததென்ப. (அ. சி.) உந்தி ....நிற்கும் - மனத்தை மணிபூரகத்தில் நாட்டி, கும்பகத்தில் இருந்து மந்திரங்களை விதிப்படி உச்சரித்தால் மந்திரங்கள் பலனைக் கொடுக்கும். சந்தி செய்யா நிற்பர் - இம்மாதிரி உச்சரிக்க அறிகிலாதார். ஆர்த்து - ஆர்ப்பாட்டம் செய்து. (45)
1. அஞ்செழுத்தா. சிவஞானபோதம், 9. 3 - 9. (பாடம்) 2. அந்தி
|