முறையும் என்ப. மறையை வேதம் எனவும், முறையை ஆகமம் எனவும் கூறுப. இவ்வெழுத்துக்களாலாகிய பயனை உணர்ந்தபின் இவை யனைத்தும் ஒடுங்கி ஐந்தெழுத்தே நின்று நிலவி முதன்மையுறும் என்க. (அ. சி.) ஐம்...தாமே - 51 எழுத்துக்களாலேயே எல்லா வேதங்களும் ஆகமங்களும். 51 எழுத்துக்களும் அஞ்செழுத்தில் அடங்கின. (51) 945. அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன் அஞ்செழுத் தாலிவ் வகலிடந் தாங்கினன் அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.1 (ப. இ.) திருவைந்தெழுத்தினுள் மகர அடையாளத்தால் உலகம் படைக்கப்பட்டது விளங்கும். அதுபோல் யகர அடையாளத்தால் உடலுடன் உயிரினை இணைத்தது விளங்கும். யோனி - உயிர். நகர அடையாளத்தால் விரிந்த வுலகத்தை இயைந்தியக்கிக் காக்கும் நடுநிலைமை விளங்கும். சிகரவகர அடையாளங்களால் எல்லாமாய் அமர்ந்தமை விளங்கும். (அ. சி.) அஞ்செ...றானே - அஞ்செழுத்துக்களே உலக உயிர்களாய் விரிந்தன. (52) 946. வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச் சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச் சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும் போந்திடும் என்னும் புரிசடை யோனே. (ப. இ.) திருவருள் துணையால் திருவைந்தெழுத்தை முறையாக இடைவிடாது கணித்தால் உலகியல் நுகர்வுடன் அதன்கண் தொடக்கின்றி வாழ்தலுமாகும். பிறவிப் பெருந்துயர் நீங்கத் தம்முதல் குருவுமாய் வந்தருள்வன். அவனே புரிசடையோனவன். புரிசடையோன்: புரி + சடையோன் - திருவாதிரை நாளை விரும்புவோன். புரிதல் - விரும்புதல். சடை: திருவாதிரைநாள், நாள் - நட்சத்திரம். சடை: பின்னல். ஒன்றாய், வேறாய், உடனாய் விரும்பியுறையும் புணர்ப்பினோன் புரிசடையோன் எனப்படும். புணர்ப்பு: பின்னல்; அத்துவிதம். (அ. சி.) வீழ்....யோனே - அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்கும் ஒருவன் பந்தத்தினின்றும் விடுபடலாம். சிவனும் வெளிப்படுவான். (53) 947. உண்ணு மருந்தும் உலப்பிலி காலமும் பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும் விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே.
1. பொன்பார். உண்மை விளக்கம், 6. " அஞ்செழுத்தே. " 45.
|