மாகிய யகரத்தைக் குறிக்கும். இவ் வைந்துடன் ஓமொழியை முதற் கொண்டு உள்ளன்புடன் ஒருமுறை ஓதினால், மகாரமாகிய நாதமெய்க்குத் தலைவனாகிய சிவபெருமான் ஓதுவார் நெஞ்சை இடமாகக் கொண்டு எழுந்தருள்வன். (அ. சி.) வளியுடன் - சீவான்மாவுடன். (60) 954. அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே அஞ்சாதி யாதி அகம்புக லாமே.1 (ப. இ.) காடாகிய தொண்ணூற்றாறு மெய்க்கூட்டத்தாலாகிய இவ் வுடம்பினுள் ஐம்புல யானைகள் தம் மனம் போல் திரிகின்றன. அவற்றைத் தடுத்து நேர்வழியிற் செலுத்த வேண்டுமானால் தோட்டியாகிய கருவி வேண்டும். அக் கருவியே சிவயநம என்னும் திருவைந்தெழுத்தாகும். அவ்வைந்தெழுத்தை இடையறாது நாடுவார்க்குத் திருவைந்தெழுத்திற்கு முதல்வனாகிய சிவபெருமானின் ஆதி என்று ஓதப்பெறும் திருவருளாற்றலின் திருவடி புகுதலாகும். இடையறாது நாடுதல் - விடாது சிந்தித்தல். (அ. சி.) அஞ்சுள ஆனை - ஐம்புலன்கள். அடவி - தத்துவக் கூட்டத்தாலாய தேகம். அஞ்சையும் கூடத்தடுக்க வல்லார்கட்கு - காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவார்கட்கு. அஞ்சாதி யாதி அகம் - அஞ்செழுத்ததிபனாகிய சிவன் இருப்பிடம். (61) 955. ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகராதி மாற்றி மகராதி நந்தியை மூலத்தே நாடிப் பரையொடுஞ் சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே. (ப. இ.) நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் ஆகிய ஐந்து திருவருள் ஆற்றல்களால் செலுத்தப்படுவன அகர முதலிய எழுத்துக்கள், நமசிவய என்பதைச் சிவயநம எனக் கணித்தல் வேண்டும். மகர முதல்வனாகிய நந்தியை மூலத்திடத்து நாடித் திருவருளோடும் சேர்த்து வழிபடுவார்க்குப் புறச் சடங்குகள் இன்றியமையாதனவன்று. மேற்கூறிய நீக்கல் முதலிய ஐந்து திருவருள் ஆற்றல்களையும் நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தி அதீதை என்னும் ஐந்து கலைகள் எனவும் கூறுப. (அ. சி.) ஐந்து கலை - நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம். அகராதி - கலைகளால் காரியப்பட்ட அகர முதலிய வன்னங்களில். நகராதி மாற்றி - சிகர முதலாக உச்சரித்து. சடங்கு - கன்மம். (62)
1. தொண்டரஞ்சு. சம்பந்தர், 2. 114 - 1.
|