956. மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும் அருமந்த 1யோகமும் ஞானமு மாகுந் தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே அருள்தங்கி யச்சிவ மாவது வீடே. (ப. இ.) பொருந்திய சிவய என்னும் மூன்றெழுத்துக்களும் முறையே அறிவும் செறிவும் ஆவியுமாகும். அறிவு - ஞானம். செறிவு - யோகம். ஆவி - உயிர். யோகம் என்பது உயிர் திருவருளுடன் கூடுதல். அஃதாவது முழுமுதற் சிவத்தை அகத்தே திருவுருவிற் கண்டு வழிபடுதல். இந்நிலை அருமருந்தன்ன நிலையாகும். திருவடியுணர்வு கைவரப் பெற்ற உயிர் இம்முறை யுணர்ந்து வழிபடத் திருவருளுடன் உயிர் கூடிய நிலையில் அவ்வுயிர் சிவம் என்று அழைக்கப்படும். அதுவே வீடாகும் (பின் பேறு என்பது சிவத்துடன் கூடுதலாகும்.) (அ. சி.) அருள்தங்கி ய சிவமாவது - திருவருட் சத்தி பதிந்து ய ஆகிய ஆன்மா சிவமாகி அநுபவிக்கக்கூடியது முத்தி இன்பம். (63) 957. அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின் நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம் வஞ்சக மில்லை மனைக்கும் அழிவில்லை தஞ்ச மிதுவென்று சாற்றுகின் றேனே. (ப. இ.) ஐந்து மலங்களும் நீங்குதற்குத் திருவைந்தெழுத்தின் உண்மையறிந்து ஓதி ஒழுகுதல் வேண்டும். அப்பொழுது சிவபெருமான் நெஞ்சத்திடத்து நிறைந்து வெளிப்படுவன் அந் நெஞ்சத்தில் பிறவிக்கு வித்தாகிய தீய நினைவுகள் தோன்றா. இவ்வுடம்பும் விரும்பும் நாள் வரையும் அழியாதிருக்கும். இந் நிலையே நமக்கு நிலைத்த புகலிடமாகச் சொல்லப் பெறும். உக - நீங்க. அம் + சுகம் என்பது அஞ்சுகம் என்றாகும்; அப்பொழுது மிகவும் இன்பம் தரும் என்று கொள்ளுதலும் ஒன்று. (அ. சி.) அஞ்சு உக - அஞ்சு மலங்கள் நசிக்க. (64) 958. சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச் சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுஞ் சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள் சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே2 (ப. இ.) சிவய என்பதனோடு முதலாய சிவ என்னும் அவ்விரண்டெழுத்தையும் கூட்டிச் சிவயசிவ எனத் தெளிந்து உள்ளன்புடன் ஓதுதல் வேண்டும். சிவயசிவ என்பதே சிவபெருமானின் மந்திர வுருவாகும். இவ் வுண்மையினைத் தெளியவல்லார்கள் சிவசிவ என்று சிறந்திருப்பார்கள். (65)
1. (பாடம்) போகமும். 2. நானேயோ 8. திருவேசறவு, 10.
|