980. சாங்கம தாகவே சந்தொடு சந்தனந்1 தேங்கமழ் குங்குமங் கர்ப்பூரங் காரகிற் பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத் தாங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே. (ப. இ.) புழுகு, கத்தூரி முதலிய சாந்துடன், சந்தனம், மணமிகுந்த குங்குமம், பச்சைக் கருப்பூரம், வயிரம் ஏறிய அகில், ஆகிய இவற்றினுடன் அளவாகப் பனிநீர் சேர்த்துக் குழைத்து அவற்றை அணியவேண்டிய இடங்களில் முறையாக அணிந்து அன்புடன் வழிபடுவாயாக. புழுகு - புனுகு. குங்குமம் - குங்குமப்பூ; செஞ்சாந்து. சாங்கம் - முறைமை. சந்து: சாந்து - மணக்கூட்டு. (அ. சி.) சாங்கம் - முறைமை. கர்ப்பூரம் - பச்சைக்கர்ப்பூரம். (2) 981. அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே பொன்செய் விளக்கும் புகைதீபந் திசைதொறுந் துன்பம் அகற்றித் தொழுவார் நினையுங்கால் இன்புட னேவந் தெய்திடும் முத்தியே. (ப. இ.) உள்ளன்புடன் படைப்பினைக் குழைத்து, விளக்கம் மிக்க திருவிளக்குகள் எல்லாப் பக்கங்களிலும் ஏற்றுக. புகையும் ஒளியும் காட்டி வழிபடுக. இனம்பற்றி மணியும் இயமும் இயம்புக. செந்தமிழ் மாமறைத் திருமுறை யோதுக. இத்தகைய தொழுகையினர் நினையுங்கால் திருவடிப் பேற்றின்பம் உடனே கைகூடும். அமுதம் - படைப்பு. நிவேதனம் - குழைத்தல்; ஊட்டல். வழிபாட்டுக்குரிய உறுப்புக்கள் ஐந்து; அவை, பூவும் புகையும், புனலும் படைப்பும், விளக்கும் ஒளியும், பாவும் பண்ணும், மணியும் இயமும் என்ப. பா - திருமுறை. இயம் - வாத்தியம்; வாழ்த்தியம் - மேளதாளம். 'திருநீற்றுப் பதிகம்' ஓதித் திருநீறு எடுத்தல்வேண்டும். 'பாராழி வட்டத்தார்' என்னும் திருப்பாட்டு ஓதிப் புகையினை எடுத்தல் வேண்டும். 'எல்லா வுலகமும்' என்னும் திருப்பாட்டு ஓதி ஒளியினை எடுத்தல்வேண்டும். 'ஒசையொலியெலாம்' என்னும் திருப்பாட்டு ஓதி பாவும் இயமும் இயம்புதல்வேண்டும். 'நமசிவய' எனக் கீழிருந்து மேல்நோக்கியும், 'சிவயநம' என மேலிருந்து கீழ்நோக்கியும், ஓம் என வட்டமிடும் முறையே 'ஆடும், சேர்க்கும், ஓங்கார' என்னும் உண்மை விளக்கத் திருவெண்பா ஓதிப் புகையொளி காட்டி வழிபடுக. (அ. சி.) அமுதம் - தளிகை. (3) 982. எய்தி வழிப்படில் எய்தா தனவில்லை எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன் எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும் எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே. (ப. இ.) மேல் ஓதப்பெற்ற பொருள்களெல்லாம் அன்பினால் தொகுத்துக்கொண்டு மெய்ம்மையாக வழிபாடு செய்யின் இவ்வுலகின் கண் எய்தவேண்டுவன அனைத்தும் எய்தும். மேலும் தேவவுலக வாழ்வும்
1. ஆளான. அப்பர், 6. 67 - 1.
|