402
 

உண்டாகும். எண்வகையான சித்திகளும் கைகூடும். எளிதிற் கிடையாத வீடுபேறும் கிடைக்கும். வழிப்படில் என்பது செந்நெறிச் செல்வர்கள் சென்ற நெறிப்படியே சென்று வழிபடுதல் என்றாகும்.

(4)

983. நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவேத் தியமனு சந்தான
நண்ணிய பஞ்சாங்க நண்ணுஞ் செபமென்னு
மன்னு மனபவ னத்தொடு வைகுமே.

(ப. இ.) ஐம்புலனும் அடக்கியவர்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார் பிறன்மனை நோக்காத பேராண்மையர். அஃதாவது அயலான் மனைவியை மறந்தும் கனவினும் மனத்தினும் தீண்டாத அருங்கற்புடைய ஆடவராவர் என்பதாம். செம்மையாக அமைக்கப்பட்ட இடைவிடா நினைப்போடு கூடிய படைப்பும், முழங்கை இரண்டு, முழந்தாளிரண்டு, நெற்றி ஒன்று ஆக ஐந்துறுப்பும் நிலத்தே படும்படி புரியும் வணக்கமும், செபமும், வழிபாட்டுக்கு இன்றியமையாதனவாகும். அத்துடன் இடைவிடா நினைப்பாகிய தியானமும், அதற்குவேண்டும். உயிர்ப்படக்கமும் வேண்டும். மனம் - விடாநினைப்பு. பவனம் - உயிர்ப்பு. பிறன்மனை என்பதற்கு மனையை உடம்பாக்கி இன்னமோர் உடம்பெடுக்கும் பிறப்பு என்றலும் ஒன்று.

(அ. சி.) அவித்தார் - ஐம்புலன்களை அடக்கியவர். மண்ணிய - நன்றாய்ச் சமைத்த. பஞ்சாங்கம் - ஐந்து அங்கங்கள் பூமியில் படும்படி கும்பிடுதல். மனபவனம் - மனமும் பிராணவாயுவும்.

(5)

984. வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்
வேண்டார்கள் கன்ம மதிலிச்சை யற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோ ராய்ந்தன்பே.

(ப. இ.) சிவபெருமானுக்கு மீளா அடிமையானவர்கள் முனைப்பொடு செய்யும் இருவினைகளையும் வேண்டார். பயன் வேண்டிச் செய்யும் கன்மங்களையும் விரும்பார். சிவயோகமாகிய செறிவுநிலையிலுள்ளார் எவ்வினையும் விரும்பார். தலையன்பு வாய்ந்தவராகிய அறிவு நிலையிலுள்ளாரும் பணியே அன்றிப் பிறப்புக்கு வித்தாகிய வினைகளை விரும்பார். பின் இரண்டடியும் செறிவும் அறிவும் குறிப்பதால் முன்னிரண்டடியும் முறையே சீலமும் நோன்பும் குறிப்பனவாகக் கொள்க.

(6)

985. அறிவரு ஞானத் தெவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலு மாமே.

(ப. இ.) அருட்கண்ணால் நோக்கும் மெய்யுணர்வில்லார் சிவனை அறியவரும் ஞானவழியாலுணரார். நெறியல்லா நெறியாகிய ஐம்பொறி வழியாகச் சிவனைக் காணலாம் என்று தேடி இளைப்பர். முறையாகச் சிவனுக்கு நிலைபெற்ற எட்டாம் இடமாகிய உயிரின்கண் இடைவிடாது