1006 . எடுக்கின்ற பாதங்கள் மூன்ற தெழுத்தைக் கடுத்த முகம்இரண் டாறுகண் ணாகப் படித்தெண்ணு நாவெழு கொம்பொரு நாலும் அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே. (ப. இ.) சிவ என்னும் மந்திரமொழியால் ஆருயிர்களை எடுத்தருளும் வகைகள் மூன்று. அவை, தன்மை முன்னிலை படர்க்கை என்பன. தன்மையில் அருளுதல் ஒருமலமுடையார்க்கு. முன்னிலையில் அருளுதல் இருமலமுடையார்க்கு. படர்க்கையில் அருளுதல் மும்மலம் உடையார்க்கு. சிவ என்னும் எழுத்திரண்டினையும் ஒத்துத் துலங்கும் அம்மையப்பர் திருமுகங்கள் இரண்டு. ஒவ்வொரு முகங்களிலும் கண்கள் மூன்று. ஆகக் கண்கள் ஆறு. மெய்யுணர்வினர் நாவின்கண் இடையறாது படித்தெழு கொழு கொம்பாகவுள்ளது 'சிவசிவ' என்னும் நாலெழுத்தாகும். முடிவு பேறில்லாத முழுமுதற் சிவனை அடையும் திருவடிப்பேற்றினர்க்கு அதுவே மெய்யுணர்வுக் கண்ணாகும். (அ. சி.) கடுத்த - ஒத்த முகம் இரண்டு - சத்தி, சிவங்களின் முகங்கள் இரண்டு. படித்தெண்ணும் - இப்படியாகக் கருதுக. (16) 1007 .அந்தமில் லானுக் ககலிடந் தானில்லை அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை அந்தமில் லானுக் கடுத்தசொற் றானில்லை அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே. (ப. இ.) முடிவு பேறில்லாத சிவனைப் போன்று ஆவியும் முடிவு பேறில்லாததே. அவ் ஆவிக்கு உரியதாகக் கொள்ளப்படும் இடம் ஒன்றும் இல்லை. அவ் ஆவிகள் அளவிறந்தன. அவ் ஆவிகளைத் தனி முறையில் குறிக்கும் சொல் ஏதும் இல்லை. சார்பு முறையில் யகரம் என்ப; யகரம் என்பது யாப்பு என்றாகும். யாப்பு - கட்டு. இஃது உடலுடனும் அருளுடனும் பிணிப்புறும் தன்மையாகும். பத்து என்பது தமிழ் எண்ணால் எழுதினால் யகரமாகும். (அ. சி.) அந்தமில்லான் - ஆன்மா. அடுத்த சொல் - குறித்த சொல். பத்து - ய. (17) 1008 .பத்திட்டங் கெட்டிட் டாறிட்டு நாலிட்டு மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும் பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே. (ப. இ.) பத்து, எட்டு, ஆறு, நாலு முதலிய இதழ்களையுடைய தாமரைபோல் அமைக்கப்படுவது மூலம் முதலிய நிலைகள். அதற்குமேல் ஓமகுண்டத்து மலர்ந்தெழுதாமரை கட்டுற்று நின்ற கலந்த உடம்பென்ப: இவ்வுடம்பகத்து நின்ற உயிர் திருவருளாகிய பார்ப்பதியைப் பொருந்தியுள்ள தென்க. எட்டு - அகர மெனவும் கூறுதலுமுண்டு; ஓமகுண்டத்தின் மேல் விரிந்துள்ள தீமண்டலம் எனவும் கூறுப. (அ. சி.) பத்து, எட்டு, ஆறு, நாலு - ஆதார இதழ்கள். (18)
|