438
 

இடர் அனைத்தும் இல்லாமல் நீக்கி, அருளின் வித்தாகிய ஆண்டவன் அன்பினை விளைவித்து, நாயனைய மனத்தை விளக்குவதாகிய சுழியகம் எனப்படும் புருவநடுவாகிய நனவு நிலைக்களத்து நிலையிலாப் பொருள்களிலும் பிறருடைமைகளிலும் செல்லும் பற்றாகிய அவாவை அடக்கி வைத்து அஞ்சாதே என்று அருளினள். சுவா: நாய் - உவம ஆகுபெயராக மனத்தைக் குறிக்கின்றது. சுழியகம் - நனவுக்களம்; விழிப்புநிலை; சாக்கிரத்தானம்.

(அ. சி.) சுவாவை - மனத்தை. சுழியகம் - சக்கரம் (ஆதார சக்கரம்).

(34)

1085 .அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இஞ்சொல் அளிக்கும் இறைவியென் றாரே.

(ப. இ.) உயிரை உய்விக்கும் அழகிய 'நமசிவய' என்னும் குரு மொழியினை அருள்பவள் திருவருளம்மை. அவளே அதற்குரிய நானெறியாம் நற்றவப்பேற்றினை நல்குபவள். புகழ்மொழி தரும் பொற்பினள். சிறந்த மாறாத பண்புகளாம் அணியருள்பவள். தன் திருவடியே புகல் என்று கருதிப் போற்றும் புண்ணியர்க்கு என்றும் பேரின்பம் பயக்கும் இனிய சொல்லையருளும் இறைவி அவளென்று நவின்றனர். இன்சொல் என்பது எதுகை நோக்கி இஞ்சொல் என்றாயிற்று. அளிக்கும் - அருளும். இறைவி - தலைவி. அளி - கருணை.

(35)

1086 .ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடுங்
கோரியென் உள்ளங் குலாவிநின் றாளே.

(ப. இ.) ஆருயிர்களின் நிலைமைகளை இடையறாது நோக்கிக் கொண்டிருக்கும் தவமுடைய பெண்ணணங்கு, மழைபோன்ற கரிய பெரிய கூந்தலையுடையவள், உலகம் அனைத்திற்கும் அன்பாயிருப்பவள், பேரூழிக்காலத்து ஊர் உடல் உலகு அனைத்தினையும் ஒடுக்கும் உட்குருவத்தை உடையவள், அவள் என் உள்ளம் புகுந்து வீற்றிருந்தருளினள். கோரம் - அச்சம்; உட்கு. கோரி - அச்சப்படுத்தும் திருவுருவுடையவள். நாரணி - அன்புடையவள். நார் - அன்பு. நாரணன் : சிவன்பெயர்.

(அ. சி.) கோரி - ஒடுக்குங் காலத்து எடுக்கும் கோர உருவம் உடையவள்.

(36)

1087 .குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி இருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே.