7. பூரண சத்தி 1101 .அளந்தேன் அகலிடத் தந்தமும் ஆதியும் அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும் அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே. (ப. இ.) திருவருள் துணையால் விரிந்த நிலவுலகத்துக்குரிய ஒடுக்கமும் தோற்றமும் சார்பளவையான் அளந்தேன். அதுபோல் ஒருவனே தேவன். அவனே ஆதிப்பிரான். அவனையும் உணர்ந்தேன். ஆண்பெண் என்னும் இரண்டின் தன்மைகளையும் ஆய்ந்தேன். அவன் திருவருளாகிய சிவசத்தியின் உண்மையினையும் உணர்ந்தேன். (1) 1102 .உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள் கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே. (ப. இ.) ஆண்டவனைத் தோற்றுவிக்கும் அருளாற்றலாகிய சத்தியின் மெய்ம்மையை உணர்கிலர். அவ்வாண்டவனை அம்மைகூட அவர் எங்கும் நிறைந்தருளினர். சிவவழிபாடியற்றும் சிவபுண்ணியப் பேறுடையாரின் திருக்கூட்டங்களைத் தன் திருவருள் பேற்றில் ஆழ்த்தியருளிய கன்னியாவள். கொண்டுவந்த முறையே உள்ளத்தால் ஒடுக்கமும் செய்வள். பூரணம் - நிறைவு. கும்பகம் - ஒடுக்கம். (அ. சி.) குணர்ந்த - கொணர்ந்த. கும்பகம் - ஒடுக்கம். (2) 1103 .கும்பக் களிறைந்துங் கோலொடு பாகனும் வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும் இன்பக் கலவி இனிதுறை தையலும் அன்பிற் கலவியு ளாயொழிந் தாரே. (ப. இ.) மத்தகம் பொருந்திய யானையை ஒத்த புலன்களைந்தும் அப் புலன்களை அடுத்துச் செலுத்தும் மனமும், அவற்றைக் கருவியாகக் கொண்டு ஒற்றித்துக் காணும் ஆவியும், திருவடி அன்பினாற் கலந்து அடங்கின. புதுமையாகக் காணப்படும் மணிதிகழ்கின்ற திருமுடியினையுடைய சிவபெருமானும், அவனுடன் ஆருயிர் இன்புறுதற் பொருட்டுக் கலந்து இன்புற்றுறையும் தையலாகிய திருவருளம்மையும் ஆருயிர் புரிந்துள்ள அன்பினால் அவ்வுயிர்களுடன் வேறறக் கலந்து நின்றனர். (அ. சி.) கும்பக் களிறு - இந்திரியம். கோல் - மனம். பாகன் - ஆன்மா. மணிமுடி வண்ணன் - பரமசிவன். இனி துறை தையல் - பூரணசத்தி. (3)
|