(அ. சி.) பார்மேல் - சுவாதிட்டானம். (6) 1107 .ஆணைய மாய்வருந் தாது ளிருந்தவர் மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின் பாணைய மாய பரத்தை அறிந்தபின் தாணைய மாய தனாதனன் தானே. (ப. இ.) மெய்ம்மையாக அன்பர் அகத் தாமரையின்கண் வீற்றிருப்பவர் அம்மையப்பராவர். மிகுதியாகத் தோன்றும் ஐயம் திரிபு முதலிய குற்றங்களை அகற்றி மனத்தை ஒருமுகப்படுத்தி முதலோசையின் உயிர்ப்பாய் விளங்கும் முழுமுதலை உணர்ந்தபின் திருவடி இன்பங் கிடைக்கப் பெறும். அது கிடைக்கப்பெற்றார் அத் திருவடிக்கு இருக்கையாவர். (அ. சி.) ஆணையம் - உண்மை. தாதுள் - ஆதாரத் தாமரையுள். மாணையமான - ஐயம், விபரீதம் முதலிய குற்றங்கள் பொருந்திய. பாணையமாய - இனிய - நாதவடிவனான தாணையமாய தன் ஆதனம் - திருவடி இன்பம். (7) 1108 .தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானேர் எழுந்து மதியை விளக்கினள் தேனேர் எழுகின்ற தீபத் தொளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே. (ப. இ.) தன்பாலுள்ள அளவிலாப் பேரருளால் மாயாகாரியத் தொகுதிகளாகிய தத்துவங்களை நடத்தும் தலைவி, திருவருள் வெளியில் செவ்விதாக எழுந்து அறிவை விளக்கியருளினள். பேரின்பத்தேனைத் தருதற்பொருட்டுத் திருவடியுணர்வுடன் தோன்றும் பேரொளியைத் தாங்கி உயிருணர்வை மன்றமாகக்கொண்டு ஆடுங்கூத்தின் உண்மை உணரீர். (அ. சி.) மதி - ஞானம். (8) 1109 .அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டமும் அறிவான மங்கை அருளது சேரிற் பிறியா அறிவறி வாருளம் பேணும் நெறியாய சித்த நினைந்திருந் தாளே. (ப. இ.) உணர்வு மெய்யெனப்படும் அறிவாயமெய் ஏழும், ஐம்புலக் கூட்டமாகிய உடல்மெய் இருபத்துநான்கும், ஆவி பேரறிவே உருவான பெருமாட்டியைச் சேர்ந்தபொழுது, அத் திருவருளின் திருவுள்ளப்படி நன்னெறிப்பட்டுச் செல்லும். சேர்ந்தார் பிரிவரிய அறிவு அறிவாம் திருவினராவர். அவர்களைத் திருவருள் சிறப்பாக நன்னெறிப்படருமாறு திருவுள்ளம்கொள்ளும். அறிவான மாயை: அசுத்த தத்துவம். ஐம்புலக் கூட்டம்: பிரகிருதிமாயை. (அ. சி.) அறிவான மாயை - மனம். அறிவான மங்கை அருள் - திருவருட் சத்தி. (9)
|