451
 

(ப. இ.) புலம் பத்தாகலின் அம்மையும் பத்துத் திருமுகங்களுடன் வீற்றருளினள். அம்மையின் உயிர்ப்பே1 ஆருயிர்க்குக் காற்றாக வழங்கலின் காற்றாக எங்கும் விரவி இருந்தனள். அருளொளி அதிருமுகத்தின்கண் ஒருங்கு திரண்டு பொலிந்து விளங்கிற்று. அத் திருமுகத்து ஒளியின் துணையால் அம்புபோல் விரைவாய் இன்பம் பொழியும் கீழ்முக நோக்கி ஆருயிர் நடந்தது. புலம் - திசை.

(அ. சி.) தன்....நாலும் - முகங்கள் பத்து. வாயு - சத்தி உயிர்ப்பு. அதோமுகம் - கீழ்முகம்.

(22)

1123 .அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மனி
கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

(ப. இ.) கணையொத்த கண்ணையும் கொம்பொத்த இடையையும் பிற அழகுகளையும் உடைய திருவருளம்மை, நறுமணங்கமழ்கின்ற செம்பொன் திருமேனியுடன் சிவபெருமானை நோக்கி ஆருயிர்கட்காம் இன்பமொழி நயமுற நாடொறும் நவில்கின்றனள். அம்மை சிவபெருமானுடன் ஆருயிர்கட்கு அருமறை பகர்கின்றனள். என்பதும் ஒன்று.

(அ. சி.) செறிகமழ் - கமழ்செறி - மணம் செறிந்த. நவிலுகின்றான் - சொல்லுகின்றான்.

(23)

1124 .நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்ட முழுதுஞ்செம் மாந்து
புகலுமுச் சோதி புனையநிற் பாளே.

(ப. இ.) எல்லாராலும் புகழ்ந்து பேசப்பெறும் பெரும்பொருள் கடவுள் - தமிழ் நான்மறையின் உள்ளுறையாற்றல். அவள் திசைகளையே மெல்லுடை ஆடையாகவுடையவள். இருநிலமே திருவடியாகவுடையவளும் அவளே. அண்டமுதலாகச் சொல்லப்பெறும் எல்லா இடங்களிலும் ஓங்கிநிமிர்ந்து சிறப்பித்துச் சொல்லப்படும் ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றினுக்கும் ஒளியருளும் அழகிய பேரொளிப்பிழம்பாய்த் திகழ்பவளும் அவளே. செம்மாந்து - ஓங்கிநிமிர்ந்து.

(அ. சி.) நான்மறை - தமிழ் நான்மறைகளை வெளிப்படுத்திய.

(24)

1125 .புனையவல் லாள்புவ னத்திறை எங்கள்
வனையவல் லாள்அண்ட கோடிகள் உள்ளே
புனையவல் லாள்மண்ட லத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற்றியென் பேனே.

(ப. இ.) எங்கள் அம்மை இருநூற்று இருபத்துநான்கென இயம்பப் பெறும் புவனங்களுக்கு முழுமுதல்வனாகிய சிவபெருமானைத் தன் ஒரு


1. என்னி. அப்பர், 5. 21 - 1.