453
 

இயக்கும் எழிலினள், நற்பயன்தரும் நல்லாள், புன்னெறியுள் செல்லும் போக்கினை விலக்கி, மேலாம் நன்னெறிக்கு உய்க்கும் நங்கை திருவருளம்மை. அவள் எளியேன் உள்ளத்தும் வீற்றிருந்தனள்.

(அ. சி.) வியோமம் - ஆகாயம். பல்...பாவை - இசைக்கும் நாயகி. புல் - புன்மையான். இசைப்பாவை வல்மனம் என்று கொள்க.

(28)

1129 .தாவித் தவப்பொருள் தானவன் எம்மிறை
பாவித் துலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசத்தி மேலொடு கீழ்தொடர்ந்
தாவிக்கு மப்பொருள் தானது தானே.

(ப. இ.) எம்மிறைவனாகிய சிவபெருமான் உலகுடல்களைப் படைத்தருள உறுதிசெய்தபொழுது பாவித்தலாகிய திருவுள்ளங் கொண்டனன். உடனே திருவருள் அவனுடன் பொருந்தி முனைத்து நின்றனள். மேலொடு கீழாக, இறைவனுடன் தொடர்ந்ததுபோல் ஆவியிலும் பொறிபுலன் கரணங்களிலும் தொடர்ந்துநின்றனள். பாவித்து - திருவுள்ளம்கொண்டு. பராசத்தி - வனப்பாற்றலாகிய திருவருள்.

(அ. சி.) தாவித்த - நிச்சயித்த பாவித்து - நினைத்துப் பார்த்து. ஆவிக்கு - உயிர்களுக்கு. அப் பொருள் - கருவிகள்.

(29)

1130 .அதுவிது என்பார் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணங் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்தறி யாரே.1

(ப. இ.) முழுமுதற் சிவனை அது இது எனச் சுட்டுப்பொருள் போல் கூறுவார் அப் பெரும் பெயர்ப் பொருளை உணரார். பெரும்பெயர்: 'நமசிவய'. திருவடிப் பேரின்பம் துய்ப்பதற்குரிய மெய்யுணர்வு கைவரப் பெறார். பேரின்பப் பெருவாழ்வைக் கைவரச் செய்யும் திருவருளினிடத்துத் தம்மை அடைக்கலமாக ஒப்புவிப்பார், இன்பத் தேன் நிறைந்த மணம் கமழும் பூச்சூடிய கூந்தலினையுடைய அம்மையின் செம்மை தேர்ந்தவரார். ஆதலால் அவர் ஏனை நிலைமைகளை ஒருசிறிதும் கருதார். காரணம் - மெய்யுணர்வு; சிவஞானம்.

(அ. சி.) கதி - முத்தி. திதம் - தன்மை.

(30)


1. அதுவிது. சிவஞானபோதம், 12. 4 - 1.