உவகையுடன் பிறர்க்குக் கொடுத்தல் இனிதின் இயலும். இஃது அறத்தின் கூறாகும். 'இரப்பவர்க்கு ஈயவைத்தார், ஈபவர்க்கு அருளும் வைத்தார்' என்பதனால் மேலது விளங்கும். அனைவர்க்கும் எல்லா இடத்தும் எல்லாக் காலத்தும் எல்லாருடனும் உயிர் தளிர்ப்ப, உணர்வு திருவடியில் மூழ்கிக் குளிர்ப்பச், சொல்லானும் பொருளானும் இனிமை பயப்பதாய் அதுபோல் கேள்வியினும் வினையினும் இனியதாய் உள்ள நன்மொழிகளை ஆராய்ந்து பார்த்துக் கூறும் இன்னுரை இயலும் என்க. இது வீட்டின் கூறாகும். பச்சிலையின் மாண்பு 'வில்லமறுகுக் கொவ்வா மென்மலர்கள்' என்னும் பிற்காலச் சான்றோர் மொழியானும் உணர்க. (3) 110. அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னுங் கற்றன போதங் கமழ்பவர் மானிடர் உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற் பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே. (ப. இ.) பற்றற்றான் பற்றினைப் பற்றிப் பற்றுவிட்ட பண்பாளராம் தவத்தோர் உண்ணும் ஊணே அறப்பாங்காகும் என்று தமிழ்மறை மொழியும், திருவடியுணர்வைத் திருவருளால் பெற்றுச் சிவ வழிபாடு திருவைந்தெழுத்தாற் செய்யக் கற்பனவே கற்றனவாம். அவற்றால் விளைவனவே போதம். போதம் என்றாலும் சிவஞானம் என்றாலும் ஒன்றே. உணர்விற் கலந்து அகத்து வெளிப்படும் அப் போதம் புறத்துச் சிவமணமாகக் கமழும். அங்ஙனங் கமழும் அருள் திருமேனியுடையார் சிவஞானத்தேன் நிறைந்த கூவலினையும் குளத்தினையும் ஒப்பர். பிறப்பற்றுச் சிறப்புற்று வாழும் பேரின்பத் தேட்டமுடையார் அம்மெய்யடியாரைச் சார்ந்து உய்தல் வேண்டும். அங்ஙனம் அறியாவிட்டால் அவர் பிறவிப்பயன் அறியாப் பெரும் பேதையராவர். நீர் வேட்கை மிக்கார் அண்மையில் கூவல் குளங்களிருந்தும் அதன்பாற் சென்று இன்னீர் பருகி வேட்கை தணிந்து இன்புறாது, பயனறியாது வாளா இருந்து துன்புறுவாரன்றே? அத் துன்புறுவாரே இவர்கட்கு ஒப்பு ஆவர். (அ. சி.) அற்று நின்றார் - பற்று அற்று நின்றார். (4) 111. அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர் விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து இழிக்கவன் றென்செய்வீர் ஏழைநெஞ் சீரே. (ப. இ.) திருவருளால் ஆணவ அழுக்கினை அகற்றித் திருவடியுணர்வை நும் உணர்வில் நிறைத்துக் கொள்ளீர். சிறப்பாகத் தழுவப்பட்ட நன்னாட்களில் செய்யத் தகும் சிவ புண்ணியங்களையும் செம்மையுறச் செய்யீர். அப் புண்ணியம் செய்யாமையான் உலகியலில் விழித்திருந்தும் அருளியலில் ஏமாந்தவராகின்றீர். அதனால் நீர் என் செய்வீர். நீரும் நும் பாவக் கொடுவினை மிகுந்து துன்புறுவீர். அக்காலத்து அத்துன்பத்திருந்து என் செய்வீர். அன்பும் அறிவுமில்லாத ஏழை நெஞ்சுடையீர். தழுக்கிய: தழுவிய என்பதன் திரிபு. இழிக்க - துன்புற. (அ. சி.) தழுக்கிய நாள் - கல்வி, செல்வம், இளமை ஆகியவை கூடி இருக்கும்போது. வெம்மை - சாக்காடு. (5)
|