1230. அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது அம்மையும் அத்தனு மாரறி வாரென்னை அம்மையொ டத்தனும் யானும் உடனிருந்து அம்மையொ டத்தனை யான்புரிந் தேனே.1 (ப. இ.) மகப்பேறு கருதி அருந்தவமிருந்து உடலுறவாம் அம்மையும் அத்தனும் என்மாட்டு அன்பு பூண்டனர். அவ்வன்பு உடலைக் கண்டேயாம்; உயிரைக் கண்டன்று. என்னை என்பது ஈண்டு உயிரை. உயிர்க்கும் உறவாம் அம்மையும் அத்தனுமாகிய சிவனும் சிவையும், அடிமையாகிய யானும் உடனுறையும் காரணத்தால் அம்மையோடத்தனாகிய சிவன் சிவை என்னும் விட்டுப்பிரியா இருவர்களையும் அருட் கண்ணே கண்ணாகக் கொண்டு அடியேனும் தொழுதுய்ந்தேன். (அ. சி.) அம்மையும் அத்தனும் - சத்தியும் சிவமும். (100)
9. ஏரொளிச் சக்கரம் 1231. ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ் ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம் ஏரொளி யக்கலை எங்கும் நிறைந்தபின் ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே. (ப. இ.) மூலாதாரத்துத் தோன்றுவது நாலிதழ்த் தாமரை. அதனுள்ளிருந்து உச்சித்தொளைவரைத் தொடர்ந்து தோன்றுவதோர் கதிரொளி உண்டு. அவ் ஏரொளித் துணையால் விந்துவின் ஒளிதோன்றும். அவ் வொளியால் நாதஒலி உண்டாம். அவ்வொப்பில்லா ஒளி எங்கும் நிறைந்தபின் நடுவாகிய வீணாத்தண்டின் இருபக்கமும் அழகிய பேரொளி தோன்றும். அதன் நடுவாகச் சுடர்ச் சக்கரம் அனற்பிழம்பாக நிற்கும். (அ. சி.) ஏரொளி - வீணாத்தண்டின் இரு பக்கமும் உள்ள கதிரொளி. (1) 1232. வன்னி யெழுத்தவை மாபலம் உள்ளன வன்னி யெழுத்தவை வானுற ஓங்கின வன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம் வன்னி யெழுத்திடு வாறது சொல்லுமே. (ப. இ.) சுடர்ச் சக்கரத்து எழுத்துக்கள் மிக்க வலுவைத் தருவன. அவ்வெழுத்தே வானுற ஓங்கும் வழியும் வகுத்தன. அவ்வெழுத்துக்களே மிகப்பெரும் சக்கரத்தமைந்தன. அவ்வெழுத்தமைக்கும் முறையும் சொல்லப்படும். (அ. சி.) வன்னி எழுத்து - ஏரொளிச் சக்கர எழுத்து. (2)
1. இட்டான். திருமந்திரம், 470.
|