1233. சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாஞ் சொல்லிடு மப்பதி யவ்வெழுத் தாவன சொல்லிடு நூறொடு நாற்பத்து நாலுரு சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே. (ப. இ.) கூறப்படும் விந்துவும் பன்னிரண்டு உயிர்ப்புக்களையுடையது. உயிர்ப்பு - பிராணண். அதன் தலைமை எழுத்துவடிவாகிய நாதமாகும். அவ்வோசை வழியாக உலகம் தோன்றிடும் முறைமைக்குப் பன்னிரண்டும் பன்னிரண்டும் உறழ நூற்றுநாற்பத்து நான்கு அறைகளுள்ள சக்கரம் தோன்றும். (அ. சி.) 1233 முதல் 1238 வரை ஐம்பூதங்களின் உற்பத்தி கூறப்படுகிறது. (3) 1234. மேல்வரும் விந்துவு மவ்வெழுத் தாய்விடும் மேல்வரு நாதமும் ஓங்கும் எழுத்துடன் மேல்வரு மப்பதி யவ்வெழுத் தேவரின் மேல்வரு சக்கர மாய்வரு ஞாலமே. (ப. இ.) உச்சியளவுஞ் சென்ற விந்துவும் நாத ஓசையால் வெளிப்படும். அதனால் அது நாத எழுத்தாகிய அகரமாகத் தோன்றும். அகர எழுத்துடன் கூடிச் சுழல மேற்கூறிய சக்கரம் உலகமாய் விரியும். (4) 1235. ஞாலம தாக விரிந்தது சக்கரம் ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும் ஞாலம தாயிடு மப்பதி யோசனை ஞாலம தாக விரிந்த தெழுத்தே. (ப. இ.) நூற்றுநாற்பத்துநான்கு அறைகளோடு கூடிய சக்கரமே உலகமாக விரிந்தது. உலகமுதலாக நிற்பதும் நாதவிந்துக்களாகும். ஞாலமும் யோசனையாகிய ஓர் நீட்டலளவையைக் கொண்டது. ஞாலமதாக விரிதற்குக் காரணமாகவுள்ளது ஓசை என்க. (5) 1236. விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும் விரிந்த எழுத்தது சக்கர மாக விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே. (ப. இ.) எழுத்தாக விரிந்தது விந்துவும் நாதமும். சக்கரமாக விரிந்ததும் அவ் வெழுத்துக்களே. அவ்வெழுத்தின் சுழற்சியால் நிலம் விரிந்தது. அந் நிலத்தின்மேல் தோன்றுவது நீராகும். (6) 1237. அப்பது வாக விரிந்தது சக்கரம் அப்பினில் அப்புறம் அவ்வன லாயிடும் அப்பினில் அப்புறம் மாருத மாயெழ அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.
|