(அ. சி.) அம்முதல் ஆறும்-அந்த முதன்மையான ஆதார எழுத்துக்கள் ஆறும். ஆதி எழுத்து - ஆக்கற்றொழிலுக்குக் காரணமான எழுத்துக்கள். இருநடு - நாபி. (10) 1241. எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும் எழுத்தவை யாறது வந்நடு வன்னி எழுத்தவை யந்நடு வச்சுட ராகி எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே. (ப. இ.) மூலாதாரமுதலாகச் சொல்லப்படும் எழுத்துக்கள் நூற்று நாற்பத்துநான்கும், அவ்வச்சக்கரங்களில் அமைந்துள்ளன. நடுவாக ஆறெழுத்துமாகும். அவற்றுள் நடுவாகக் காணப்படுவது அனலாகும். எழுத்துக்கள் முதலும் முடிவும் ஆவன. (11) 1242. அந்தமும் ஈறு முதலா னவையற அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால் அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின் அந்தமும் இந்துகை யாருட மானதே. (ப. இ.) மேற்கூறிய அந்தமும் ஈறும் முதலானவை நீங்க, நெஞ்சம் மிடறு என்னும் ஈரிடத்துமுள்ள எழுத்துக்கள் பதினெட்டாகும். பன்னிரண்டாம் நிலை எனப்படும் துவாதசாந்தா தீதத்தின் எழுத்துப் பதின்மூன்றாகும். அதன்மேல் திங்கள்மண்டிலம். அதன்மேல் அறியும் நிலையுளது. (அ. சி.) பதினெட்டு - விசுத்தி - ஆஞ்ஞையின் எழுத்துக்கள் . பதின்மூன்று - துவாத சாந்தத்தின் எழுத்துக்கள். இந்துகை - சந்திர மண்டலம். ஆருடம் - அறிதல். (12) 1243. ஆவின மானவை முந்நூற் றறுபது மாவின மப்பதி னைந்தின மாயுறு மாவின மப்பதி னெட்டுட னாயுறு மாவின மக்கதி ரோன்வர வந்தே. (ப. இ.) ஆவினம்-(அவ்வினம்) அதன் வகை. பகலவன் வகையாகத் தோன்றும் நாள்கள் முந்நூற்றறுபது. மாதத்தின் இருகூறு பதினைந்து தினம். இது பிறை யல்லது பக்கம் எனக் கூறப்படும். திங்கள் பன்னிரண்டும் கார்முதலாகச் சொல்லப்படும் பருவம் ஆறும் ஆகிய பதினெட்டு இவையெல்லாமாகப் பொருந்துகின்ற கால எண்ணிக்கைகள், காலமெய்யினைப் படைத்தருளும் கால காலனாகிய சிவபெருமானாலாவன. அதனால் அவன் சிவக்கதிரோன் எனப்படுவன். அக் கதிரோன்வர இவை எல்லாம் வந்தனவென்க. (அ. சி.) ஆவினம் - அந்த வகை. (13)
|