(அ. சி.) தந்திரம் - ஆகமம். கந்தரம் - கழுத்து. இரேகையில் - வரைகளில். பந்தமதாகும் பிரணவம் - வரைகளைக் கொண்ட சக்கரத்தில் பந்தித் திருக்கும் பிரணவத்தை. உன்னிட - தியானிக்க. (27) 1258. உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம் பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை தன்னிட் டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப் பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே. (ப. இ.) அகவழிபாடாகப் புரியப்படும் ஓமொழி வட்டத்தில் பொருந்தித் தோன்றும் மந்திரம், கலந்துள்ள சக்கரத்தின்கண் வரையப் படுதல் தவறுதலில்லை. அம் மந்திரத்தை ஒட்டி எழுந்த தடை நீங்க அதன்பின் நிற்கும்படி சொல்லப்பட்ட மந்திரத்தை ஆராய்தலுமாம். (அ. சி.) பின்னிட்ட - கலந்துள்ள. தன்னிட்டு - வரையப்பட்டு. எழுந்த - எழுந்த மந்திரம். பன்னிட்ட - சொல்லப்பட்ட. (28) 1259. பார்க்கலு மாகும் பகையறு சக்கரங் காக்கலு மாகுங் கருத்தில் தடமெங்கும் நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள் ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே. (ப. இ.) பிறப்பு இறப்புக்களாகிய பழம்பகையை அகற்றும் தன்மைவாய்ந்த சக்கரத்தை. அன்புடன் நோக்குதலும் ஆகும். விரிந்த கருத்தின்கண் அமைத்துக் காத்தலுமாகும். சோர்வின்றி அதன்பாலே நோக்கல் நோக்கமாகிய தியானத்தைப் புரிதலுமாகும். அவ்வுணர்விற் காணும் நுண் பொருளை ஆக்கலாகிய அழுந்தி அறிதலைப் புரிதலுமாகும். அழுந்தியறிதல் - அனுபவித்தல். (அ. சி.) பகை - பிறவிப்பகை. நுணக்கற்ற - தளருதல் இல்லாத. (29) 1260. அறிந்திடுஞ் சக்கர மாதி யெழுத்து விரிந்திடுஞ் சக்கர மேலெழுத் தம்மை பரிந்திடுஞ் சக்கரம் பாரங்கி நாலும் குவிந்திடுஞ் சக்கரங் கூறலு மாமே. (ப. இ.) மேற்கூறிய முறையான் அறியப்படும் சக்கரம் ஆதியை உடைய சிவபெருமானின் எழுத்தாகிய சிகரமாகும். அதன் மேலெழுத்து அம்மை எழுத்தாகிய வகரமாகும். மற்றைய இடங்களில் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகிய நான்கு பூதங்களின் எழுத்தாகும். அவை முறையே ல வ ர ய என்ப. (அ. சி.) ஆதி எழுத்து - ஆதி சத்தியோடு கூடிய சிவன் எழுத்து மேலெழுத்து அம்மை - அதன் மேலே சத்தி எழுத்து. பார் அங்கி நாலும் - பார், நீர், தீ, வாயு எழுத்துக்கள் நான்கும். குவிந்திடும் - கூடிய (30)
|