509
 

(ப. இ.) நேர் வந்தருளும் பராசத்தியும் ஆதிசத்தியும் ஆகிய திருநாயகி எந்நிறத்தள் என்று அறியலுறுவார் காயாம் பூப்போலும் கரிய நிறம் என அறிவர். அந்நிறமாக நினைத்துத் தொழுவார்க்கு அவர்கள் நினைத்தன திருவருளால் கைகூடும். திருநாயகிக்கு அன்பு சுரக்கும் வண்ணம் வழிபாடும் வாழ்க்கை முறையும் சிறந்த ஒழுக்கமாகக் கொண்டு ஒழுகுவாயாக.

(அ. சி.) திரு - சிவசத்தி - ஆதிசத்தி - வண்ணம் - நிறம். பொற் பூவைக் கார்தரும் வண்ணம் - காயாம் பூப்போலும் நிறம். நார் - விருப்பம்.

(7)

1301. நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாங்
கடந்திடுங் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.

(ப. இ.) திருநாயகியைத் தொழுவார்க்கு உலகின்கண் அவளருளால் எல்லா நலங்களும் பெருகும். காலனும் வந்து அணுகான்; கருதியபடி வாழ்நாளும் பெருகும். எங்கணும் புகழ் ஓங்கும். பரந்த கதிர்களையுடைய பகலவனைப்போல் நிகரின்றி விளங்கி ஒளிவிடுவர். இத் திறமெல்லாம் எய்தத் திருநாயகியை நெஞ்சே நீ நினைப்பாயாக.

(அ. சி.) காலனும் எண்ணிய நாளும் கடந்திடும் - யமனும் அணுகான்; வரையறுக்கப்பட்ட வாழ்நாளும் பெருகும்.

(8)

1302. அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடு மாதி யருளுந் திருவும்
அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

(ப. இ.) திருநாயகி அருளால் பொன், வெள்ளி, மாணிக்கம், முதலிய எல்லாப் பொருள்களும் எளிதின் வந்தடையும். ஆதியாகிய சிவபெருமான் திருவருளும், திருவடிப்பேறும் எய்தும். விரும்பினால் அண்டங்களில் வாழும் தேவர்கள் வாழ்வும் கிட்டும். இம் முறைமைகளையறிந்து இவையெல்லாம் கைகூடும் வண்ணம் அருளம்மை திருவடியை வழிபடுவாயாக.

(அ. சி.) திரு - முத்தி. வண்ணம் - முறைமை.

(9)

1303. அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வானை முயன்றிடு நீரே.

(ப. இ.) தேவர்களாமாறு அருள்செய்கின்றவன் சிவன். இதனை மெய்யுணர்ந்தார் அறிவர். விண்ணவரும், விண்ணவர் தலைவனும் வாழுமாறு அருள்செய்பவனும் சிவனே. கங்கையாற்றினை உலகுய்யச் சூடுபவனும்,