1319. தானது கம்இரீம் கௌவது ஈறாம் நானது சக்கர நன்றறி வார்க்கெலாம் கானது கன்னி கலந்த பராசத்தி கேளது வையங் கிளரொளி யானதே. (ப. இ.) சக்கரம் வரைபவர் எழுத்துக்களை மாற்றியும் வரைவர். அது மரபுமாகும். அம் முறையில் கிரீம் முதலாகக் கௌ ஈறாக வரைந்து வழிபடும் சக்கரம் நானறிந்த முறையில் நவாக்கரி சக்கரமாகும். அதனது நன்மையை அறிபவர்கட்கெல்லாம் கடம்பவனத்து வாழும் என்றும் கன்னியாகி யாண்டும் கலந்த பேரறிவுப் பேராற்றலாம் அம்மை உறவினளாவள். அத் திருவருளம்மையால் உலகெலாம் விளங்கும் பேரொளியானது தோன்றிற்று. பராசத்தி - பேரறிவுப் பேராற்றலள். கேள் - உறவு. கம் + இரீம் = கிரீம்: க + இரீம் = கிரீம். (அ. சி.) நான் அது - நான் அறிந்த அந்த. கான் - கடம்பவனம். கேள் அது - உறவு ஆனது. (26) 1320. ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரிற் களிக்கும்இச் சிந்தையிற் காரணங் காட்டித் தெளிக்கு மழையுடன் செல்வமுண் டாக்கும் அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே. (ப. இ.) கரவாடும் வன்நெஞ்சர்க்கு ஒளிக்கும் பேரறிவுப் பேராற்றலளாம் அம்மை அன்பருள்ளத்து வெளிப்பட்டு அமர்ந்திருப்பள். அதனால் அவ்வுள்ளம் பெருமகிழ்வு கொள்ளும். அவ்வுள்ளத்திற்கு அனைத்திற்கும் வினைமுதற் காரணமாம். சிவபெருமானைக் காட்டுவித்து வழிபடச் செய்வள். தெளிய வேண்டிய பொருள்களனைத்தையும் தெளிவித்தருள்வள். அத் தெளிவருளுடன் பெருந்திருவினையும் உடைமையாக அளித்தருள்வள். திருவருளும் புரிவள். இவளை அறிந்து வழிபடுவாயாக. (அ. சி.) ஒளிக்கும் - வஞ்சகர்க்கு மறைந்திருக்கும். காரணம் - சிவத்தை. தெளிக்கும் - தெரிவிக்கும். அளிக்கும் - காப்பாற்றுவாள். (27) 1321. அறிந்திடுஞ் சக்கரம் அருச்சனை யோடே எறிந்திடும் வையத் திடரவை காணின் மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும் பொறிந்திடுஞ் சிந்தை புகையில்லை தானே.1 (ப. இ.) அருளாலறிந்து கைக்கொண்டொழுகும் நவாக்கரி சக்கரத்தினை வழிபடுவாயாக. அஃது உலகத் துன்பங்கள் அனைத்தையும் நீக்கும். சிறையிலடைத்துத் தண்டம் செய்யும் மன்னனும் வலிய வந்து வழிபடுமாறு செய்யும். உள்ளத்தைக் கலங்க வைக்கும் எவ்வகைத் துன்பங்களும் உளவாகா.
1. மூவுருவின். அப்பர், 6. 98 - 6. " புல்லறிவிற். 12. திருநாவுக்கரசர்; 145.
|