521
 

1336. தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே யனைத்துள அண்ட சகலமே.1

(ப. இ.) திருவருளம்மை நான்கு பூதங்களுக்கும் இடங்கொடுத்து மேலோங்கிநிற்கும் வெளியாகிய வானம்போன்று எங்கும் நிறைந்துள்ளாள். அவளே சிவவுணர்வுப் பெருவெளியாவள். நிலத்திணை இயங்குதிணை என்னும் எல்லாவுயிர்களுக்கும் இருவினைகட்கு வேண்டியவாறு உடல்களைப் படைத்தளிப்பவளும் அவளே. அவ்வுயிர்கள் இளைப்பாறுதற் பொருட்டு அவ்வுடல்களைத் துடைத்தழிப்பவளும் அவளேயாவள். அவளே தாங்கும் கலப்பால் அண்டமும் உலகமும் அனைத்துமாகுவள்.

(அ. சி.) வெளியென - ஆகாயத்தைப் போலப் பரமவெளி ஞானாகாயம்.

(43)

1337. அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினுங்
கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே.

(ப. இ.) அண்டமாகிய பேருலகின்கண் பிரிப்பின்றி நிறைந்து நிற்கும் திருவருளம்மை அளத்தற்கரிய வியத்தகு தன்மையள். பிண்டமாகிய உடலின் கண்ணும் வெளிக்கு வெளியாம் அருள்வெளி கண்டவள். ஓமம் செய்தற்குரிய இடனாம் கொப்பூழின்கண் தோன்றும் நன்மைகள் பல காண்பர். கண்டாலும் மிடற்றோசை ஆகிய வைகரிவாக்குத் தோன்று தலரிது. அவ்வோசை தோன்றின் அத்துடன் முழுமுதல் சிவனைக் காணுதலுங் கூடும். இவ்வுண்மையினை அறியார் பலராவர்.

(அ. சி.) குண்டம் - நாபி. கண்டம் - விசுத்தி.

(44)

1338. கலப்பறி யார்கடல் சூழுல கெல்லாம்
உலப்பறி யாருட லோடுயிர் தன்னைச்
சிலப்பறி யார்சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.2

(ப. இ.) முழுமுதற் சிவன் திருவருளை இடமாகக்கொண்டு எங்ஙணும் நிறைந்து நிற்பன். அவ்வுண்மையை அருளால் உணர்ந்தவர் உடலுடன்கூடி நெடுநாள் கேடின்றிவாழ்வர். இறந்து பிறந்து உழலும் தேவரை நாடித் தொழுவோர் ஓசையின் உண்மையினை உணராராவர். அத்தகையோர், நல்ல தலையெழுத்துப் பெறாதவராய்ப் பிறந்திறந்துழலும் தலையெழுத்துச் சுமந்தவராவர். ஓசை - திருச்சிலம் பொலி.


1. சத்தியும். சிவஞான சித்தியார், 1. 3 - 19.

2. செத்துச். அப்பர், 5. 100 - 2.