1470. அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும் மறுகா நரையன்னந் தாமரை நீலங் குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ் சிறுகால் அறநெறி சேரகி லாரே.1 (ப. இ.) வண்டுகள் தேனையுண்டு இன்புறும்பொருட்டுத் தேனிறை பூக்களை நாடித்திரியும். அதுபோல் வெள்ளை அன்னங்களும் தாமரை மலரை நாடித்திரியும். அத்தகைய சிறப்புப் பொருந்திய தாமரை நீலம் முதலிய பூக்களைத் தக்க செவ்வியில் மெய்யடியார்கள் புனல் முழுகி வாய் புதைத்து உள்ளம் திருவைந்தெழுத்தோதிக் கொய்வன கண்டும் கால முண்டாகவே சிலர் அறனெறியாகிய செந்நெறி சேராது பின்னிற்பர். (அ. சி.) அறுகாற் பறவை - வண்டு மறுகா - அலைந்து. நரை அன்னம் - வெள்ளை அன்னப்பறவை. சிறு கால் - இளம் பருவம். (3) 1471. அருங்கரை யாவது அவ்வடி நீழற் பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம் ஒருங்கரை யாயுல கேழினொத் தானே.2 (ப. இ.) ஆருயிர்கள் பிறவிப் பெருங்கடல் நீந்திக் கரையேறும் அரியகரை சிவபெருமான் திருவடிநீழலாகும். அனைத்துயிர்க்கும் பேரெல்லையாகத் திகழ்வது சிவபெருமான் ஆணையாகும். வினைக் கீடாக வரும் பிறப்பெழுவகையுட் புகும் உயிர்கட்கெல்லாம் ஒப்பில்லாத ஒரு தனி வேந்தாய்த் தோன்றிய உலகனைத்தினும் ஒப்பநின்றருளினன் சிவன். (அ. சி.) அருங்கரை - சம்சாரக் கடலுக்குக் கரை. வருங்கரை - எழும் பிறப்புக்கள். அரையாய் - இறைவனாய். (4) 1472. உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின் பயந்தும் பிறவிப் பயனது வாகும் பயந்து பரிக்கிலப் பான்மைய னாமே.3 (ப. இ.) திருவேடப் பொலிவால் உயர்ந்தும், சிவனடியார் திருவடியிணையினைப் பணிந்தும், அதனால் உள்ளம் உவந்தும், திருவைந் தெழுத்தினை அகம் தழுவியும், அதனால் வியப்புற்றும் சிவபெருமான் திருவடிக்கே திருத்தொண்டு செய்வோம் என்பாரே மகன்மை நெறியினராவர். அப் பணியினை அன்புடன் செய்யுங்கள். பிறவிக்கு அஞ்சிப்
1. பெரும்புலர். அப்பர். 4. 31 - 4. " வைகறை. 12. எறிபத்தர், 9 " திருநாமம். அப்பர், 6. 95 - 6. " அன்பு. 12. ஏயர்கோன், 226. 2. துன்பக். அப்பர், 4. 92 - 6. 3. அஞ்சி. " 5. 23 - 9.
|