12. தாச மார்க்கம் (அடிமை நெறி) 1475. எளியனல் தீப மிடல்மலர் கொய்தல் அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல் டளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.1 (ப. இ.) அடியார்க்கு எளியனாய் ஒழுகுதல், திருக்கோவில்களில் நல்ல விளக்கிடுதல், திருநந்தனவனத்தில் மலர்கொய்தல், அன்புடன் மெழுகல், திருவலகிடுதல், திருமுறைத் திருப்பதிகம் பாடியபடி பொருள் சேர் புகழை ஓதி வாழ்த்தல், திருக்கோவிற்கண் உள்ள அசையா மணி போன்ற விளக்கமிக்க பெரிய மணிகளை அடித்தல், திருமுழுக்குக்கு வேண்டிய திருத்தநீர் முதலியன கொணர்தல் இன்னும் திருக்கோவில் திருத்தொண்டு பலவும் புரிதல் அடிமைநெறி என்ப. பளி: பள்ளி என்பதன் இடைக்குறை. பள்ளி - திருக்கோவில். தளி - திருக்கோவில். அடிமைநெறி - தாசமார்க்கம். (அ. சி.) எளி - பணிவாக. அளிதின் - அன்புடன். தூர்த்தல் - திருவலகு இடல். பளி - பள்ளி; கோவில். (1) 1476. அதுவிது வாதிப் பரமென் றகல்வர் இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை விதிவழி யேசென்று வேந்தனை நாடும் அதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.2 (ப. இ.) ஆதிப்பரம் அது இது என்று ஐயுற்றுத் தெளியாது நீங்குவர். வாய்மைச் செந்நெறி இது என்று தெளிந்து வேந்தனாம் சிவபெருமானை வழிபட்டுத் தொழுதாரில்லை. தமிழ்த் திருமாமறை திருமுறை வழியே உண்மை கண்டு ஓர்ந்து செந்நெறிச் சென்று சிவபெருமானை நாடுங்கள். அதுவே உள்ளத்தில் தோன்றும் ஐயுறவை அகற்றித் தெளிவினைத் தருவதாகும். தணித்தல் நீக்குதல். திருமாமறை - தமிழ் வேதம். திருமுறை - தமிழாகமம். வேந்தன் - மருதநிலத் தெய்வம். (அ. சி.) விதி வழி - தமிழ் வேதம்; தமிழ் ஆகமங்கள் விதித்தபடி. வேந்தன் - சிவபெருமான். (2)
1. திருக்கோயி. அப்பர், 6. 95 - 5. " நல்ல. 12. கணநாதநாயனார், 3. " தாதமார்க். சிவஞானசித்தியார், 8. 2 - 9. " நீறணிந்தார், 12. திருநாவுக்கரசர், 68. " மூவா. அப்பர், 4. 114 - 3. 2. அல்லலாந். தாயுமானார். 15. தேன்முகம், 6. " வேந்தன்: சிவபெருமான் (மாயோன், தொல். பொருள் - 5). " செத்துச். அப்பர், 5. 100 - 2.
|